மகாபாரதத்தோடு தொடர்புடைய நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவில்
நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும்.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி தாலுகாவில் உள்ள அகரமேல் எனும் நசரத் பேட்டையில் அமைந்துள்ளது, ஸ்ரீபச்சைவாரணப் பெருமாள் திருக்கோவில். உடையவர் ராமானுஜரின் முக்கியமான இரண்டு சீடர்களில் ஒருவரான சுவாமி முதலியாண்டானின் அவதார தலம் என்ற பெருமையும் இவ்வூருக்கு உண்டு. இத்தலத்தில் உள்ள மூலவர் 'பச்சைவாரணப் பெருமாள்' என்றும், தாயார் 'அமிர்தவல்லி' என்றும் அழைக்கப்படுகின்றனர். மேலும் இந்த கோவில் மகாபாரதத்தோடு தொடர்புடைய தாகவும் விளங்குகிறது.
தல புராணம்
மகாபாரதப் போரில் ஒருகட்டத்தில் துரோணாச்சாரியாரை வீழ்த்தவில்லை என்றால், போரில் பாண்டவர்கள் தோற்பது உறுதி என்ற சூழ்நிலை உண்டானது. அப்போது, ஸ்ரீகிருஷ்ணர் தருமரிடம், “அஸ்வத்தாமன் இறந்து விட்டதாக தாங்கள் துரோணாச்சாரியாரிடம் கூறினால், அவர் பலம் இழந்து விடுவார். பின்பு, அவரை சுலபமாக வீழ்த்தி பாண்டவர்களைக் காப்பாற்றி விடலாம்” என்றார். தருமரோ ஒருபோதும் பொய் கூறமாட்டேன் என, இதற்கு உடன்பட மறுத்தார்.
இச்சமயத்தில் பீமன் அஸ்வத்தாமன் என்ற யானையை கொன்று வீழ்த்தினான். இதைப் பயன்படுத்தி தருமரை நோக்கி “பீமன் அஸ்வத்தாமன் என்ற யானையைக் கொன்று விட் டான். அதனால் இப்போது நீங்கள் 'அஸ்வத்தாம அதஹ: குஞ்சரஹ:' (அஸ்வத்தாமன் எனும் யானை கொல்லப்பட்டது) என்று மட்டும் சொல்லுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.
தருமரும் கிருஷ்ணர் கூறியவாறே 'அஸ்வத்தாம அதஹ: குஞ்சரஹ:' என்று பெருங்குரலில் சொன்னார். அந்த சமயத்தில் கிருஷ்ணர் சங்கநாதம் செய்து, 'அஸ்வத்தாம அதஹ:' என்ற வார்த்தைகள் மட்டும் துரோணாச்சாரியார் காதில் விழும்படி செய்து 'குஞ்சரஹ:' என்பதை அதாவது 'யானை' என்ற வார்த்தையை அவர் காதில் விழாதவாறு செய்து விடுகிறார்.
தருமர் ஒருபோதும் பொய் கூற மாட்டார் என்ற நம்பிக்கை கொண்டவர், துரோணர். இதனால் தருமர் சொல்வதைக் கேட்ட துரோணாச்சாரியார், தன் மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்துவிட்டதாக நினைத்தார். எனவே, மனமுடைந்து பலமிழந்து தனது வில்லை கீழே போட, அவர் வீழ்த்தப்படுகிறார். இதன் விளைவாக பாண்டவர்கள் போரில் வெல்கிறார்கள்.
தான் சொன்ன ஒரு பொய்யால் துரோணாச்சாரியார் மாண்டு விட்டதாக எண்ணி தருமரின் மனமானது கலங்கிய நிலையில் இருந்தது. இதற்கு பரிகாரம் தேட நாரதமுனியை சந்தித்து ஆலோசித்தார், தருமர். நாரதமுனியின் வழிகாட்டுதலின்படி பாண்டவ சகோதரர்கள் அனைவரும் அகரமேல் என்ற இந்த கிராமத்தில் “தர்ம சத்ர யாகம்” நடத்தினார்கள். பகவான் கிருஷ்ணர், எந்த யானையை வைத்து தருமரை பொய் கூற வைத்தாரோ அதே பச்சை யானையின் மீது சத்யபாமா ருக்மணிதேவி சமேதராக யாகத்திலிருந்து தோன்றி பாண்டவர்களுக்கு காட்சி கொடுத்தார். தர்ம சத்ர யாகத்திற்குப் பின்னர், பாண்டவர்கள் மன நிம்மதி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு
கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் அழகிய மதில்சுவர்களோடு கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. இங்கு, மேற்கு திசை நோக்கி அமைந்த பக்தஆஞ்சநேயரின் சன்னிதி, நான்கு கால் மண்டபம் காட்சி தருகிறது. ராஜகோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால், பலிபீடம், துவஜஸ்தம்பம் முதலான வற்றை நாம் தரிசிக்க முடிகிறது. தீபஸ்தம்பத்திற்கு முன்னால் கீழ்ப்புறத்தில் யானைச் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. இத்தகைய அமைப்பினை வேறெங்கும் காண இயலாது.
கோவிலுக்குள் நுழைந்ததும் வலது புறத்தில் ஒரு மண்டபத்தில் அமைந்துள்ள சன்னிதியில் ராமர், சீதாதேவி மற்றும் லட்சுமணர் ஆகியோர் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்திற்குள் பக்த ஆஞ்சநேயருக்கு ஒரு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. மூலவரை நோக்கி கருடாழ்வார் ஒரு சன்னிதியில் அமைந்துள்ளார்.
மகாபாரதத்தோடு தொடர்புடைய இத்தலத்தின் கருவறையில் மூலவர் ஸ்ரீபச்சைவாரணப் பெருமாள் ருக்மணி சத்யபாமா சமேதராக ஒரு திருவடியை மடக்கியவாறும், மற்றொரு திருவடியை கீழே நீட்டியவாறும் அமர்ந்து அழகிய திருக்கோலத்தில் காட்சி தந்து அருள்கிறார். வலது திருக்கரம் அபயஹஸ்த நிலையிலும், இடது திருக்கரத்தை அவாஹன முத்திரை நிலையிலும் வைத்துக் காட்சி தருகிறார்.
கருவறைக்கு வலது புறத்தில் சுவாமி முதலியாண்டான் சன்னிதியும், அருகில் சுவாமி மணவாள மாமுனிகளுக்கு தனிச் சன்னிதியும் உள்ளன. முன்மண்டபத்தில் அனந்தன், சேனைமுதலியார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியார் ஆகிய ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சிலாரூபங்களாகவும், உற்சவ மூர்த்திகளாகவும் அமைந்து அருள்கிறார்கள். வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் அமைந்துள்ள ஒரு தனிச் சன்னிதியில் தாயார், ஸ்ரீஅமிர்தவல்லி என்ற திருநாமம் தாங்கி அருள்பாலிக்கிறார். இச்சன்னிதிக்கு முன்னால் ஒரு கலைநயமிக்க நவராத்திரி மண்டபம் அமைந்துள்ளது.
ஸ்ரீஆண்டாள் எனும் கோதை நாச்சியார் இத்திருத்தலத்தில் ஒரு தனிச் சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். திருமண பாக்கியம் வேண்டி இவரை தரிசிப்போருக்கு விரைவில் திருமணம் நடந்தேறி செல்வச்செழிப்புடைய வாழ்க்கை கிடைக்கும் என்பது இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது. இச்சன்னிதியில் பரமபத வாசல் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பலா மரமும், தீர்த்த மாக தர்ம புஷ்கரணியும் உள்ளது.
விழாக்கள்
பெருமாளுக்கு பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்களும், ஆடி மாதத்தில் பவித்தோற்சவம், மூன்று நாட்கள் வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்கவாசல் திறப்பு முதலான உற்சவங்களும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்களின் வழிபாட்டிற்காக இத்தலம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்
பூவிருந்தவல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நசரத்பேட்டை சந்திப்பு. இங்கிருந்து இடதுபுறத்தில் திரும்பி, ஊருக்குள் சென்றால், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம்.








