நாடி வரும் பக்தர்களுக்கு சகல வளமும் அருளும் நம்பி சாஸ்தா

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகில் கால்வாய் என்ற ஊரில் நம்பி சாஸ்தா கோவில் உள்ளது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்பி குடும்பத்தில் 7 சகோதரர்கள் இருந்தனர். இவர்கள் இந்தியா முழுவதும் தீர்த்த யாத்திரை கிளம்பினார்கள். 7 பேரும் வட இந்தியாவில் இருந்து ஒவ்வொரு திவ்ய தேசமாக குதிரையில் யாத்திரை வந்தனர். தாமிரபரணி ஆற்றங்கரையில் திருவைகுண்டத்தை சுற்றி உள்ள நவதிருப்பதிகளிலும் யாத்திரையை முடித்தனர். பின்பு அவர்கள் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி கிளம்பினர்.
அங்கு மகேந்திரகிரியில் அரசாட்சி புரியும் கிடந்த நம்பி, இருந்த நம்பி, சயன நம்பி, திருப்பாற்கடல் நம்பி. திருமலை நம்பி ஆகிய ஐவரை தரிசனம் செய்து அவர்களோடு ஐக்கியமாகி விட வேண்டும் என்று நினைத்தனர். அவர்களின் பயணம் கால்வாய் கிராமத்தினை அடைந்தது. செல்வ செழிப்புமிக்க கால்வாய் கிராமத்தின் குளத்து கரைக்கு வந்தனர். குளுமையின் காரணமாக சகோதரர்கள் அனைவரும் அங்கே சற்று ஓய்வு எடுத்தனர்.
அதில் இளைய நம்பி அயர்ந்து தூங்கி விட்டார். மற்றவர்கள் எழுந்தனர். இளைய நம்பி ஓய்வெடுக்கட்டும் நாம் கிளம்பி செல்வோம். அவனின் குதிரை வேகமானது. எனவே அவன் எழுந்தவுடன் நம்முடன் சேர்ந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அவனையும், அவன் குதிரையையும் விட்டு விட்டு கிளம்பினர். அவருக்கு காவலாக பூதநாதரையும் உடன் இருக்கவைத்தனர்.
சிறிது நேரம் கழிந்ததும் இளைய நம்பி எழுந்தார். அண்ணன்மார் தன்னை மட்டும் விட்டுச் சென்றதை அறிந்தார். கோபமடைந்த இளையநம்பி. “என்னை தனியாக விட்டுச் சென்று விட்டார்கள். இனி அவர்களோடு நான் போய் சேர முடியாது. என்னை வணங்குவோருக்கு நன்மை அளிக்கும் விதமாக நான் இங்கேயே தங்கப் போகிறேன். வேண்டுமென்றால் நீர் எனது அண்ணன்மாரோடு போய் சேர்ந்து கொள்ளும்” என்று கூறினார்.
அப்போது பூதநாதர், "இளைய நம்பியாரே... உமக்கு காவலுக்கு மட்டும் என்னை அவர்கள் விட்டு விட்டுச் செல்லவில்லை. இப்பகுதியை நீர் காவல் காக்க, என்னை படைத் தளபதியாக விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். அப்படியிருக்க நான் எப்படி அவர்களோடு செல்ல முடியும்? நானும் உம்முடனே இருக்கிறேன்” என்று கூறினார்.
அதன்பிறகு குதிரையுடன் அவர்கள் இருவரும் அங்கேயே தங்கி விட்டனர். இவர் தங்கிய குளக்கரை 'நம்பி குளம்' என்றழைக்கப்பட்டது. அதன்பின் நம்பியும், பூதநாதரும், அவர்களின் குதிரையும் அங்கே தங்கி, வந்து செல்வோருக்கு அருள் வழங்க ஆரம்பித்தனர்.
ஆலமர வேரில் தங்கிய நம்பி சாஸ்தா
நம்பி அங்குள்ள ஆலமரத்து வேரிலிலேயே தங்கிவிட்டார். சில காலங்களில் அவர் வழிபாடு முழுவதும் மறைந்து போய்விட்டது. காலம் காலமாக இங்கிருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசைபட்ட நம்பி வெளிப்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார். நாட்கள் கடந்தன. வேரில் இருந்த நம்பி பக்தர்களை சோதிக்க ஆரம்பித்தார்.
அந்த சமயத்தில் அங்கு கால்நடைகளை மேய்ச்சல் செய்வதற்காக சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வந்தனர். நம்பி குளத்துக் கரையில் விழுதுகளை பிடித்து அவர்கள் வேகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். அந்த மரத்தில் ஏறி தங்களது கால்நடைகள் எதுவரை மேய்கிறது என்று கண்காணித்து வந்தனர். மாலை வேளையில் அவர்கள் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தபோது, வேரில் இருந்த நம்பி அவர்களை தட்டி விட்டார். இதனால் சிறுவர்கள் தடுமாறி விழுந்தனர். கால் நடைகளும் தடுமாறி விழுந்தன. அங்கு சென்ற பெரியவர்களும் வேர் தட்டி விழுந்தனர். உடனடியாக ஊர் கூடி பேசி, அந்த இடத்தில் உள்ள வேரை வெட்டி எடுக்க முடிவு செய்தனர்.
அதன்படி வேரை வெட்ட அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. இதனால் பயந்து போனவர்கள், அலறியடித்துக்கொண்டு ஊருக்குள் சென்று பெரியவர்களிடம் நடந்த விவரத்தினை கூறினர். மீண்டும் ஊர் கூடியது. ‘ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம். நாளை காலையில் எழுந்தவுடன் திருவைகுண்டம் போய் குறி கேட்கவேண்டும்’ என்று முடிவு செய்தனர். காலையில் திருவைகுண்டம் நோக்கி கிளம்பினர். நம்பி குளத்துக் கரையில் வரும்போது, எதிரே குறிசொல்லும் குறத்தி இன பெண் அவர்களை மறித்து, “குறி சொல்லப் போறேன். குறிசொல்லப் போறேன். நீங்கள் குறி கேக்கப் போற கதையை சொல்லப் போறேன்..” என ஆரம்பித்தவுடன் அனைவரும் கதிகலங்கி போய்விட்டார்கள்.
குறத்தி வடிவில் நம்பி தன்னை வெளிப்படுத்தினார். “நம்பி நான் ஆலமரத்து வேருல இருக்கேன். நம்பி வந்தவருக்கு நம்பிக்கை தருவேன். நம்பினோரை கைவிடமாட்டேன்” என்று 7 சகோதரர்களோடு தான் வந்த கதையை சொல்லி முடித்தார்.
நம்பியை நம்பிய ஊர் மக்கள், ‘என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டனர். “குளத்துக் கரையில் நான் அருள் ஆட்சிபுரியும் வேரை அப்படியே வைத்து வணங்குங்கள். என்னை நாடி வந்து வணங்கி நிற்போருக்கு சகல வளமும் கிடைக்கும்” என்று கூறிவிட்டு குறத்தி மறைந்தார்.
இதனால் ‘வந்தது குறத்தியல்ல, நம்பிதான்’ என்று மக்கள் நம்பினர். நம்பி கூறியது போலவே மறுநாள் குளத்துக்கரைக்கு வந்தனர். தானே முளைத்த லிங்கமாக இருந்த அந்த வேரை அப்படியே வணங்க ஆரம்பித்தனர்.
கால்வாய் கிராமத்தின் நுழைவுவாசலில் இருந்து வலதுபுறம் திரும்பி சுமார் 1 கிலோ மீட்டர் சென்றால் அங்கே நம்பி சாஸ்தாவை தரிசிக்கலாம். பிரதான வாசல் வடக்கு நோக்கி உள்ளது. குளத்துக் கரையில் உள்ள ஆலமரக்கூட்டத்தை கடந்து உள்ளே நுழைந்ததும் குலமாடன் இருக்கிறார். அடுத்து யானை, குதிரை போன்ற வாகனங்கள் அணிவகுத்து உள்ளன. வலதுபுறத்தில் கிழக்கு நோக்கி பிரம்மசக்தி, இசக்கியம்மன், பேச்சியம்மன், சிவனணைந்த பெருமாள், தானே முளைத்த நம்பி, மேற்கு நோக்கி வன்னிமாடன், வன்னிமாடத்தி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். அடுத்து உள்ளே நுழைந்தால் விநாயகரும், லாட சன்னியாசியும் உள்ளனர்.
உள்ளே கருவறையில் விநாயகரும், காவல் தெய்வம் பூதநாதரும் அருள்பாலிக்கிறார்கள். அதே கருவறையில் கிழக்கு நோக்கி தானே முளைத்த லிங்கமாய், நம்பி சாஸ்தா உள்ளார். தற்போதும் மூலவரை நாம் கவசத்தினை எடுத்து பார்த்தால் ஆலமரத்தின் வேரில் அவர் உருவமாக இருப்பதை காணலாம். நம்பியின் உருவம் பல நூறு ஆண்டுகளை தாண்டியது. இவருக்கு பிரதான வாசல் கிடையாது. இவர் அண்ணன்மார் மீது உள்ள கோபத்தினால் நேரில் யார் வந்தாலும் அவர்கள் மீது இவரது கோப ரேகை விழும். எனவே இவரை நேரில் நின்று தரிசிக்க கூடாது என்பதற்காக சிறு துளையிட்டுள்ளனர். அதன் வழியாகத்தான் நம்பி சாஸ்தாவை தரிசனம் செய்யவேண்டும். கோவில் தீர்த்தமாக நம்பி குளம் உள்ளது.
வழிபாடு
திருமணத் தடை உள்ளவர்கள் 11 சனிக்கிழமை கோவிலுக்கு வந்து வழிபட்டால் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும், தங்கள் துணையுடன் கோவிலுக்கு வந்து நம்பியை தரிசனம் செய்து செல்கிறார்கள். பங்குனி உத்திரத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்து குடும்பத்தோடு கோவிலுக்கு வருகின்றனர். இரவு பொங்கலிட்டு நம்பியை வணங்கி மறுநாள்தான் ஊருக்கு செல்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடும் பெரும்பாலான மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நம்பி, அழகிய நம்பி, நம்பிராஜன், நம்பி நாச்சியார், திருமலை நம்பி என்ற அடைமொழியுடன் பெயர் வைக்கின்றனர்.
இக்கோவிலில் தினமும் பூஜைகள் நடக்கின்றன. சனிக்கிழமை தோறும் அன்னதானமும் நடைபெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆதிச்சநல்லூர் என்னும் ஊர். இங்கிருந்து வலதுபுறம் 3 கி.மீ. சென்றால் நம்பியை தரிசிக்கலாம்.