குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், முருகப் பெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு அபூர்வமான காட்சியாக, இடப்பக்கம் அமைந்த மயில்மீது அமர்ந்து சம்ஹார மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.
கோவில் உருவானது எப்படி?
மேல்பட்டாம்பாக்கம் கிராமம் விவசாயத்தையே பெரிதும் நம்பி இருந்தது. இங்கு வணிகம் செய்யும் செங்குந்த மரபினர் அதிகம் வசித்து வந்தனர். இவர்கள் வியாபார நோக்கத்தில் வெளியூர் செல்வதும், இவ்வூரிலேயே வியாபாரம் செய்வதுமாக இருந்து வந்தனர். ஒரு காலகட்டத்தில் வியாபாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் பெருத்த பொருள் நஷ்டம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் கலங்கி நின்றனர்.
அப்போது ஒரு வயதான முதியவரின் ஆலோசனைப்படி, ''முருகனுக்கு ஒரு ஆலயம் அமைத்து நாம் வழிபட்டால் நிச்சயம் அவன் நமக்கு நல்வழி காட்டுவான்'' என்று முடிவு செய்தனர். தங்களால் இயலாத சூழ்நிலையிலும், ஆலயம் அமைக்க தங்களிடம் இருந்த எல்லா பொருட்களையும் முருகனுக்கே அர்ப்பணிக்க முடிவு செய்தனர்.
அதன்படி 1880-ம் ஆண்டு ஆலயம் கட்டி முடித்து வழிபாடுகள் நடத்த தொடங்கினர். அதன்பின்னர் ''ஆஹா என்ன அற்புதங்கள்..'' என்று சொல்லும் அளவிற்கு வணிகம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது. பிற்காலத்தில் பெரிய கோவிலாக கட்டி தற்போது கம்பீரமாக மிக அழகுற காட்சி தருகிறது, வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் ஆலயம்.
கோவில் அமைப்பு
கோவிலுக்கு பிரமாண்டமான வரவேற்பு வளைவு உள்ளது. அதில் முருகன் வள்ளி தேவசேனா, ஒரு பக்கம் விநாயகர், மறுபக்கம் சிவன்-பார்வதி நம்மை வரவேற்கின்றனர். அங்கிருந்து நிமிர்ந்து பார்த்தால் கம்பீரமான 3 நிலை ராஜகோபுரம் காட்சி தருகிறது.
ஆலயத்தின் ராஜகோபுரம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்பக்கம் இரு துவாரபாலகர்கள், விநாயகர், முருகன் ஆகியோர் காட்சி தருகின்றனர். இடது பக்கம் மேலே தட்சிணாமூர்த்தியும், ராஜகோபுரத்தை சுற்றியிருக்கும் மதில் சுவற்றில் பார்வதி, பரமசிவன், முருகன், விநாயகர், மகாலட்சுமி ஆகியோரின் சுதை சிற்பங்களும் மிக அழகுற காட்சி தருகின்றன. இவர்களை வணங்கி ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால், சோபன மண்டபம் மிகப் பிரமாண்டமாக காட்சி தருகின்றது.
இங்கு விநாயகர் அற்புத கோலமாய் அமர்ந்திருந்து அருள்பாலிக்கிறார். அவருக்குப் பின்னால் கம்பீரமான வேல் உள்ளது. அடுத்ததாக பலிபீடம், கொடிமரம் மிகப் பிரமாண்டமான வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு ஒரு மயில் சிற்பம் கோவில் கருவறையை பார்த்தவாறு அமைந்துள்ளது. பொதுவாக அனைத்து முருகன் கோவில்களிலும் உள்ள மயில் சிற்பத்தில் ஒரு நாகம் காலை சுற்றி உள்ளவாறு அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு அமைந்துள்ள மயில் சிற்பத்தில் 3 நாகங்கள் உள்ளது சிறப்பானது.
மகாமண்டபத்தின் இடதுபுறம் காசி விசுவநாதர், விசாலாட்சி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்கள். அவர்களுக்கு நேர் எதிர்புறம் அருணகிரிநாதர் காட்சி தருகிறார். அடுத்து அர்த்த மண்டபத்தை கடந்து சென்றால் கருவறையில் அழகன் ஆறுமுகன் பன்னிரெண்டு திருக்கரங்களுடனும், ஆறு முகங்களோடும் சுப்பிரமணியராக அருள்புரிகிறார். இவர், இடப்பக்கம் இருக்கும் மயில் மீது அமர்ந்து வள்ளி - தேவசேனா சமேதராக, கையில் வேல் ஏந்தி சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். அனைத்து முருகன் கோவில்களிலும் மயில் வலதுப் பக்கம் இருக்கும். ஆனால் இங்குள்ள மயில் இடது பக்கமாக நம்மை நோக்கி பார்ப்பது போல அமைந்துள்ளது மிக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.
கருவறையின் மீது உள்ள விமானம் மிக அழகாக இருக்கிறது. இடப்பக்கமும், வலப்பக்கமும் சுப்பிரமணியர் - வள்ளி தேவசேனா காட்சி தருகிறார்கள். அவர்களை வணங்கிவிட்டு கோபுரத்துக்கு பின்புறம் சென்றால் முருகன் ஆண்டி கோலத்தில் அற்புதமாய் காட்சி தருகிறார். அவருக்கு பக்கத்தில் இடும்பன் இருக்கிறார்.
கோஷ்டத்தில் விநாயகர், இடும்பன், பைரவர், நவக்கிரகம், வன்னி மரத்தடியில் விநாயகர், நாகர் ஆகியோர் உள்ளனர். பொதுவாக நாகர் சிலையில் நாகம் மட்டுமே இருக்கும். ஆனால் இங்குள்ள நாகத்தின் மேல்புறத்தில் சிவலிங்கம் உள்ளது சிறப்பு.
விழாக்கள்
இத்தலத்தில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் 9 நாள் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் கார்த்திகேயன் காட்சி தருகிறார்.
வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை போன்ற நாட்களில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்று பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர். குழந்தை பாக்கியம் கிடைத்தவுடன் மீண்டும் இவ்வாலயத்திற்கு வந்து, குழந்தைகளுக்கு முருகனின் பல்வேறு திருநாமங்களில் ஒன்றை பெயராக சூட்டுகின்றனர்.
கந்தசஷ்டி திருவிழா இங்கு ஒன்பது நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாளும் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு ஆராதனைகள் செய்து சுவாமி வீதிஉலா காட்சி தருவார். கந்தசஷ்டி அன்று காலையில் கம்பம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் 40 அடி உயரமுள்ள ஒரு கம்பத்தை பூமியில் புதைத்து வைக்காமல் பூமியின் மேல் வைத்து இருபுறமும் கயிறுகட்டி விடுவார்கள். பின்பு ஒரே சமயத்தில் ஒன்பது பக்தர்கள் அரோகரா கோஷத்தோடு கம்பத்தின் உச்சிக்கு சென்று அங்கு சூரனுக்கு எதிராகவும், முருகனை வணங்கியும் பாடல்கள் பாடுவார்கள்.
இந்த நிகழ்வின்போது கம்பம் கம்பீரமாக நிற்கும். ஒன்பது வீரர்கள் ஏறியும் அந்த கம்பம் அப்படியே சாயாமல் நிற்கும் காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும். மாலையில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறும்.
மறுநாள் திருக்கல்யாணம் வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். திருமணத் தடை உள்ள ஆண், பெண் இருபாலாரும் இந்த வைபவத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த வைபவத்தின்போது முருகனுக்கு அணிவிக்கும் மாலையை பெற்று, தங்கள் வீட்டு பூஜையில் வைத்து பூஜித்தால் மிக விரைவாக தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதேபோல் வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை வழிபட்டால் நாக தோஷம், செவ்வாய் தோஷத்தால் தடைப்படும் திருமணங்கள் சிறப்பாக நடப்பதாக கூறப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படுகிறது.
கோவில், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
கடலூர் - பண்ருட்டி சாலையில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் மிக அருகிலேயே கோவில் உள்ளது.