மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள் வைகுண்டத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் மணக்கால் அய்யம்பேட்டை தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படுகின்றது.
திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை எனும் பகுதியில் அமைந்துள்ளது வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படுகிறது. இத்தல இறைவன் வைகுண்ட நாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.
கோவில் கி.பி.7-கி.பி.9-ம் நூற்றாண்டு காலகட்டத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு புதைப் பொருட்களாக கிடைத்த விக்ரகங்களை வைத்தே கோவில் அமைக்கப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, இந்த ஊரை சதுர்வேதி மங்கலம் என அழைத்துள்ளனர்.
கி.பி. 14-ம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பின்போது இக்கோவில் சேதமடைந்தது. இதையடுத்து பலபேரின் முயற்சியில் கோவில் புதுப்பிக்கப்பட்டது, 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவுவாசலில் கொடிமரம், பலிபீடம் உள்ளது. கருவறையில் மூலவர் வைகுண்ட நாராயணப் பெருமாள், நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், அமர்ந்த கோலத்தில் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கிறார். மேல் இரு கரங்களில் வலது கரத்தில் பிரயோக நிலையில் சக்கரமும், கீழ் இரு கரங்கள் வரத, அபய முத்திரையோடும் எழுந்தருளியிருக்கிறார்.
பெருமாள் வைகுண்டத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் இங்கு எழுந்தருளி இருப்பதால் இத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படுகின்றது. கோவில் பிரகாரத்தில் ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோர் தனித்தனி சன்னிதியில் காட்சி அளிக்கின்றனர். தெற்கு பகுதியில் லட்சுமி குபேரரும், தென்மேற்கு பகுதியில் சக்கரத்தாழ்வாரும் அருள்பாலிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் வலம்புரி விநாயகர், நாகர் ஆகியோர் காணப்படுகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான், மானுட வடிவில் இத்தலம் வந்து இங்கு அருள்பாலிக்கும் லட்சுமி குபேரனை வழிபட்டு கடன் பெற்றுச் சென்று அலர்மேல் மங்கை தாயாரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பெருமாள் இழந்த செல்வத்தை மீண்டும் பெற காரணமாக அமைந்த கோவிலாக இது உள்ளது.
மார்கழி மாதம் அதிகாலையில் சுக்ர பகவான் தனது ஒளியால் இந்த தலத்தில் உள்ள வைகுண்ட நாராயணப் பெருமாளை தரிசிப்பதாக ஐதீகம். ஒருவரது ஜாதகத்தில், சுக்ரன் பலம் இழந்தோ அல்லது ஆதிபத்திய தோஷம் பெற்றிருந்தாலோ, அதனை நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாக இக்கோவில் விளங்குகிறது. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் இக்கோவிலுக்கு வந்து தேங்காய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுக்ர தோஷம் நிவர்த்தி ஆகும்.
திருமணம் கைகூட நினைப்பவர்கள், இத்தலத்து பெருமாளின் காலடியில் எலுமிச்சம் பழத்தை வைத்து அர்ச்சனை செய்கின்றனர். பின்பு அந்த எலுமிச்சம்பழச் சாறை அருந்தினால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த தலத்தில் உள்ள லட்சுமி குபேரரை வழிபட்டால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்கிறார்கள்.
கோவில், காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
திருவாரூரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்.








