சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்


சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்
x

மலைமண்டல பெருமாள் கோவிலில் கருடனின் தலையும், பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது தனிச் சிறப்பு ஆகும்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் பகுதியில் அமைந்துள்ளது, பழமை வாய்ந்த மலைமண்டல பெருமாள் கோவில். இந்த ஆலயம் சிறிய மலை போன்ற மேடான பகுதியில் அமைந்துள்ளதால் இத்தல இறைவன் 'மலைமண்டல பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு 'கிரி வரதராஜப் பெருமாள்' என்ற திருநாமும் உண்டு. தாயார் பெருந்தேவி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். இக்கோவில் 'தென் பத்ரி' என்றும் போற்றப்படுகிறது.

கோவில் அமைப்பு

இந்த ஆலயம் கி.பி. 850-ம் ஆண்டில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலயம் பதினெட்டு சித்தர்கள் வழிபட்ட தலமாகும். ராமேஸ்வரம் கடலில் குளித்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இங்குள்ள 'அர்த்த சேது' என்னும் சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் குளித்தாலும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கோவில் முன்மண்டபத்தில் ஒரே கல்லில் அமைக்கப்பட்ட பிரபையுடன் கூடிய லட்சுமி நாராயணர் காட்சி தருகிறார். இவர்தான் இத்தலத்தின் மூலமூர்த்தியாய் இருந்துள்ளார். கோவில் திருப்பணியின்போது, பூமியிலிருந்து கிடைக்கப் பெற்ற ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய கிரிவரதராஜரே பிற்காலத்தில் மூலவராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறார்.

கோவில் கருவறை நுழைவுவாசலில் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். நிலைப்படியில் எங்கும் காணாத அதிசயமாக யோக நரசிம்மரின் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. இவருக்கும் அபிஷேக ஆராதனைகள் உண்டு. கருவறைக்குள் கிரிவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பெருமாள் சுமார் ஆறடி உயரம் கொண்டவர். ஒரு காலை முன்வைத்தபடி கஜேந்திர மோட்சத்திற்குச் செல்லும் நிலையில் காணப்படுகிறார். அவரது வலக்கை சக்கரம் சற்று சாய்ந்து ஏவிய நிலையில் உள்ளது. அவரின் முன்னதாக உற்சவ மூர்த்திகள் உள்ளனர்.

லட்சுமி நாராயணருக்கு இருபுறமும் இரண்டு தாயார்கள், தனிக் கோவிலில் பெருந்தேவி தாயார் என இத்திருத்தலத்தில் மூன்று வடிவங்களில் தாயார் காட்சியளிப்பது சிறப்பாகும். கருவறையில் பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் விக்ரகம் காணப்படுகிறது. பொதுவாக அஞ்சலி முத்திரையுடன் காட்சியளிக்கும் அனுமன் இங்கு திருக்கரத்தில் புஷ்பம் ஏந்தி காணப்படுகிறார்.

இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் கருட பகவான் மிகவும் விசேஷமானவர். இவர், உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாக அணிந்து, அஷ்ட நாக கருடனாக காட்சி தருகிறார். இவர் ஒரு நாகத்தை தலையில் கிரீடமாகவும், இரண்டு நாகங்களை காதணிகளாகவும், இரண்டு நாகங்களை கழுத்தில் மாலையாகவும், இரண்டு நாகங்கள் இரண்டு கைகளில் ஆபரணமாகவும், இடுப்பில் ஒற்றை அரைஞாண் கயிறு போலவும் தரித்திருக்கிறார். இவர் வழக்கமான அஞ்சலி முத்திரை இன்றி, கையில் தாமரை ஏந்தி காட்சி தருகிறார். இவரைத் தரிசிப்பவர்களுக்கு சகலவித சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் கருடனின் தலையும், பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது, இக்கோவிலின் தனிச் சிறப்பு ஆகும். இந்த அமைப்பானது, கருடன் எப்போதும் பெருமாளுக்காக திருவடி சேவை செய்து வருவதைக் காட்டுகிறது. எனவே, கருடாழ்வாருக்கு செய்யும் பிரார்த்தனைகள் அனைத்தும் நேரடியாக பெருமாளின் பாதங்களில் விழுகிறது என்பது ஐதீகம்.

இந்த கோவிலில் உள்ள ஒரு விளக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. விளக்கின் மேற்பாகத்தில் கருடரும், நாகங்களும் உள்ளன. கீழ் பாகத்தில் கிளிகள் தாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. இவ்விளக்கு கிரிவரதராஜரின் அருளாணைப்படி, சிதம்பரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வீட்டில் இருந்து இக்கோவிலுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விளக்கில் நெய் ஊற்றிப் பிரார்த்தனை செய்து கொண்டால் வாழ்வில் ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

வழிபாடு

இங்குள்ள கருடாழ்வார், அஷ்ட நாக கருடனாக காட்சி தருவதால் இத்தலம் சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகின்றது. இந்த கருடாழ்வாருக்கு பால் அபிஷேகம் செய்யும்போது, அந்தப் பாலானது நீல நிறமாக மாறுவது ஒரு தனி சிறப்பாகும். பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இவருக்கு நெய் தீபங்களை ஏற்றி, அமிர்த கலச கொழுக்கட்டையை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

அமைவிடம்

சென்னையில் இருந்து கல்பாக்கம் செல்லும் வழியில் கல்பாக்கத்திற்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது.

1 More update

Next Story