கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் கோவில்
திருமணம் தடைப்படும் இளைஞர்கள், மானேந்தியப்பரை தொடர்ந்து வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது, கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் கோவில். இந்த கோவிலின் அருகில் திருவாவடுதுறையின் கிளை மடமான 'தளச்சேரி மடம்' உள்ளது. 'தளி' என்றால் கோவில், கோவில்கள் அதிகமாக உள்ளதால் இப்பகுதி 'தளச்சேரி' என்றழைக்கப்படுகிறது. தளச்சேரி என்றால் 'மேடான பகுதி' என்றும், 'சேத்திரம்' என்றும் பொருள்படும்.
தல புராணம்
தாருகாவனத்தில் வாழ்ந்த முனிவர்கள் தாங்களே தவத்தில் சிறந்தவர்கள் என்றும், தம்முடைய தேவியர்கள் பதிவிரதத்தில் மேம்பட்டவர்கள் என்றும் ஆணவத்துடன் பேசி வந்தனர். அத்துடன் முப்பெரும் தேவியர்களையும், தேவர்களையும் கர்வத்துடன் பார்த்தனர். அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், பிட்சாடன் வேடம் பூண்டார். திருமாலும் மோகினி வடிவத்தில் அவருடன் வந்தார். அவர்கள் இருவரையும் கண்ட முனிவர்களும், அவர்களது பத்தினிகளும் அவர்கள் மீது மோகம் கொண்டனர். வெட்கப்பட்டு தலை குனிந்தனர். அந்தச் சமயம் திடீரென சிவனும், விஷ்ணுவும் மறைந்தனர்.
இதை அறிந்த முனிவர்கள் தங்களது தர்ம பத்தினிகளை தலைகுனிய செய்த ஹரி, ஹரன் மீது கோபம் கொண்டனர். அவர்களை அழிக்க கஜத்தை அனுப்பினர். இறைவன் சூரசம்கார மூர்த்தியாக மாறி கஜத்தை எதிர்க்கொண்டு தாக்கினார்.
சிவனை அழிக்க முனிவர்கள் 'ஆபிசாரஹோமம்" நடத்தினார்கள். அந்த ஹோமத்தில் இருந்து புலி, யானை, பாம்பு, முயலகன் என்னும் அரக்கன் முதலியோர் தோன்றினர். அவர்கள் சிவனோடு மோதினார்கள். எதிர்த்து வந்த யானையையும், புலியையும் கொன்று அவற்றின் தோல்களை வெற்றிக்கு அடையாளமாய் சிவன் தரித்துக்கொண்டார்.
சீறி வந்தப் பாம்பைச் சிவன் கழுத்தில் ஆபரணமாக பயன்படுத்திக் கொண்டார். அரக்கன் முயலகன் இறைவன் திருவடியால் மிதித்து ஆட்கொள்ளப்பட்டான். மானை அடக்கி இடது கரத்தால் ஏற்றி காதருகே வைத்துக் கொண்டார், சிவபெருமான். மானைக் கையில் ஏந்திய சிவன் என்பதால் 'மானேந்தியப்பர்' என்றழைக்கப்படுகிறார்.
மோகினி உருவம் கொண்ட திருமால், தாம் எடுத்த மோகினி வடிவோடு 'வடிவாம்பாள்' எனத் திகழ்கிறார். அம்மன் 'காந்திமதியம்மை' என்றும் அழைக்கப்படுகிறார். 'காந்தி' என்றால் ஒளி, அழகு என்ற பொருள் உண்டு.
கோவில் அமைப்பு
கோவிலின் வடதிசையில் தாமிரபரணி ஆற்றில் 'கண்ணுவதீர்த்தம்' உள்ளது. நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அப்போது இங்குள்ள கண்ணுவ தீர்த்தத்தில் மூழ்கி கோவில் பிரசாதம் உண்டு வலி நீங்கப் பெற்றார். அதன் பிறகு அவர் செவ்வாய்க்கிழமை தோறும் 10 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். அந்த மடமே செவ்வாய்கிழமை மடம் என்றழைக்கப்படுகிறது.
இந்தத் தீர்த்தம் அருகே உள்ள பாறையில் விநாயகர், முனிவர், சிவலிங்கம் போன்ற உருவங்கள் உள்ளன. சிவராத்திரி அன்று பக்தர்கள் இங்கு நீராடி புனித தீர்த்தத்தைக் குடத்தில் எடுத்துக் கொண்டு மானேந்தியப்பர் கோவில் கொடி மரத்தின் அருகே உள்ள நந்தி தேவருக்கு அபிஷேகம் செய்வார்கள்.
கோவில் சன்னிதியில் உயர்ந்த கல்தூண்கள் இருவரிசையிலும் உள்ளன. திருவிழாக் காலங்களில் இங்கு பெரிய அளவில் கொட்டகை போட்டு கோவிலை அலங்கரிப்பது வழக்கமாகும். இவ்விடத்தைத் தாண்டி சிறிது தூரம் கிழக்கே வந்தால் சன்னிதியின் இருபுறமும் தேர் மண்டபங்களை காணலாம். இங்கு தேர்கள் உள்ளன. தெருக்களுக்கு அப்பால் பச்சைப் பசேல் என்று வயல்கள் உள்ளன. கோவிலை சுற்றி 277 அடி நீளமும், 130 அடி அகலமும், 12 அடிக்கு மேல் உயரமுடைய மதில் சுவர் சதுர வடிவில் உள்ளது. கீழ்திசையில் உள்ள வாசல் பெரியதாகவும், மேல் திசையில் உள்ள வாசல் குறுகியும் அமைந்துள்ளன. கீழ்ப்புற வாசலின் முன் ஓர் அழகிய மண்டபம், இருபுறங்களிலும் உயர்ந்த திண்ணை போன்ற அமைப்புடன் காட்சித் தருகிறது. இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது.
இந்த கோவிலில் பார்க்கும் இடமெல்லாம் சிற்பங்கள் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென்புறமுள்ள ஊஞ்சல் மண்டபம் நீளவாக்கில் உள்ளது.
திருவிழாக்கள்
சித்திரை விசுவில் கனிகாணும் நிகழ்ச்சியும், வைகாசி மாதம் விசாகமும், ஆனி பூரமும், ஆடி வளைகாப்பும், ஆவணியில் பிட்டுக்கு சிவபெருமான் மண் சுமந்த திருக்காட்சியும், புரட்டாசியில் நவராத்திரியும், ஐப்பசியில் சஷ்டியும், முருகன் திருக்கல்யாணமும், மார்கழியில் திருவாதிரையும், தை மாதம் ரத சப்தமி எனும் 10 நாள் திருவிழாவும், மாசி சிவராத்திரியும், பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெறுகிறது, பிரதோஷ வழிபாடு நந்திக்கும், தேய்பிறை அஷ்டமி வழிபாடு பைரவருக்கும், வளர்பிறை பஞ்சமி, தேய்பிறை பஞ்சமி வழிபாடு வாராகி அம்மனுக்கும் நடைபெறும்.
திருமணம் தடைப்படும் இளைஞர்கள், பள்ளியறை பூஜையில் நேரில் வந்து ஜாதகத்தினை வைத்து பூஜை செய்து, தொடர்ந்து 48 நாள் ஆலயத்தில் சிவன்-சக்திக்கு அர்ச்சனை செய்தால் திருமணம் நடைபெறும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் வடிவாம்பாள் முன்பு அமர்ந்து லலிதா சகஸ்ரநாமம் கூறி பிரார்த்தனை செய்தால் அரசு வேலை கிடைக்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
குழந்தைப் பேறு
கோவில் முன்புள்ள கொடிமரம் அருகே 'மாடன் தம்பிரான்' என்ற காவல் தெய்வம் உள்ளது. இந்த காவல் தெய்வத்துக்கு அமாவாசை தோறும் இரவு 7 மணிக்கு சைவ படைப்பு செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவில் கொடி மரத்தை அடுத்துள்ள மகா மணிமண்டபத்தில் பாவுக்கல்லின் மேல் இரு மீன்கள் உள்ளன. இக்கோவில் பாண்டிய மன்னர் ஆட்சியில் கட்டப்பட்டு இருக்கவேண்டும் என்பதை இந்த மீன்கள் குறிக்கின்றன.
தளச்சேரி மடத்துக்கும், மானேந்தியப்பர் கோவிலுக்கும் நெருங்கியத் தொடர்புண்டு. மடத்தின் சிலைகள் இக்கோவிலில் உள்ளன. இக்கோவிலில் அபிஷேகம் செய்யும் பல ஒதுவார்கள் இங்கிருந்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர். மடம் 'விளாப்பூஜைக் கட்டளை' இக்கோவிலுக்கு செய்து வருகிறது. விளாப்பூஜை என்பது உதய மார்த்தாண்ட பூஜையை குறிக்கும்.
இந்த கோவிலில் காலசந்தி, விளாப்பூஜை, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்த சாமம் என ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. கோவில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் திறந்து வைக்கப் பட்டிருக்கும்.
அமைவிடம்
திருநெல்வேலியில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் கல்லிடைக்குறிச்சி உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கல்லிடைக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கோவிலை சென்றடையலாம். பஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோவில்தான் கோவிலுக்கு செல்ல முடியும்.