மனக்குறைகளை போக்கும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி


திருச்செந்தூருக்குப் பிறகு, சூரசம்ஹாரத்தின் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில் பெயர் பெற்றது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குண்டுக்கரை எனும் ஊரின் அருகில் அமைந்துள்ளது, சுவாமிநாத சுவாமி திருக்கோவில். சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்துக்கு வந்திருந்தார். அப்போது முருகனுக்கு 11 தலைகள், 22 கைகள் இருந்ததாக கூறப்படுகிறது. அதே வடிவில், விஸ்வரூபம் எடுத்த நிலையில் இத்தலத்து உற்சவர் முருகன் தரிசனம் தருகிறார். சிவனும் முருகனும் ஒன்றே. சிவனுக்குரிய ஐந்து முகமும், முருகனுக்கு உரிய ஆறுமுகமும் சேர்ந்தே இங்கு பதினோரு முகமாக இருக்கிறது என்றும், முருகனுடைய 12 கைகளும் சிவனுடைய 10 கைகளும் சேர்ந்து 22 கைகளாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். இப்படி ஒரு அதிசய முருகனை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

தல வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி மன்னர் குண்டுக்கரை முருகன் கோவிலுக்கு தினமும் வந்து வழிபாடு செய்துள்ளார். ஒருமுறை மன்னர் சுவாமி மலைக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு திரும்பினார். அப்போது, அவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி, ‘‘குண்டுக்கரை முருகன் கோவிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்துவிட்டு, புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும்’’ எனக் கூறி மறைந்தார்.

இதையடுத்து, ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி, குண்டுக்கரை சென்று அந்த கோவிவில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றி விட்டு, புதிதாக முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிமலை முருகனின் பெயரான சுவாமிநாதன் என்பதையே இத்தலத்து முருகனுக்கும் சூட்டினார்.

கோவில் அமைப்பு

ஆலயத்தின் முன்பு ராஜகோபுரம் அழகுற காட்சியளிக்கிறது. ஆலயம் நுழைவு பகுதியில் நந்தியும், வேல், மயில், பாம்புடன் கொடிமரம் ஆகியவை பக்தர்களைக் கவரும் அம்சமாகக் காணப்படுகின்றன. ஜெயதுர்கா தேவி அம்மன், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், விநாயகர், பாலமுருகன், நவக்கிரகங்கள், பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், வீரபாகு ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இத்தலத்து விநாயகர் 12 கரங்களுடன் மடியில் சித்தி புத்தியுடன் காட்சியளிக்கிறார்.

சுவாமிமலை ஞானம் வழங்கும் ஆலயம். அங்கு தந்தைக்கு மகன் சுவாமியாய் நின்று போதித்த காட்சி இடம் பெற்றுள்ளது. மன்னருக்கு சொன்னபடி, முருகப்பெருமான் அந்த ஞானமூர்த்தியாகவே இங்கும் எழுந்தருளியிருக்கின்றார். ஆனால், மற்ற ஆலயங்களில் முருகப்பெருமான் சிவன் மடியில் அமர்ந்து, தந்தைக்கு போதிப்பது போன்ற சிலை அமைந்திருக்கும்.

ஆனால் இந்த தலத்தில் அந்த காட்சிக்கு மாற்றாக தகப்பன் சுவாமியான முருகப்பெருமான் ஒரு குன்றின் மேல் அமர்ந்து, தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளுக்கு விளக்கம் அளிக்க, அதை சிவபெருமான் கீழே நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது இத்தலத்தின் தனிச் சிறப்பு ஆகும். இத்தலத்தில் பாம்பன் சுவாமிகள் உள்ளிட்ட பலர் வழிபட்டிருக்கின்றனர்.

விழாக்கள்

இந்த ஆலயத்தில் அஷ்ட கஜபுஜ மகாலட்சுமியாக காட்சியளிக்கும் 7 அடி உயரமுள்ள துர்க்கை 18 திருக்கரங்களைக் கொண்டு பிரமாண்டமான வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்தப் படுகிறது. தைப் பொங்கல் தினத்தன்று, துர்க்கா தேவிக்கு ‘சாகம்பரி’ என்று அழைக்கப்படும் அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்மன், காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்படுகிறார். சித்திரை முதல் தேதி அன்று இந்த துர்க்கை அம்மனுக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும்.

வைகாசி விசாகத்தின் போது, இங்கு பிரம்மோற்சவ விழா நடத்தப்படுகிறது. சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இந்தக் கோவிலில் கொண்டாடப்படும் பிற முக்கிய விழாக்களாகும். திருச்செந்தூருக்குப் பிறகு, சூரசம்ஹாரத்தின் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு இந்தக் கோவில்தான் பெயர் பெற்றது. மூலவர் கவாமிநாத சுவாமிக்கு ஐப்பசி கந்த சஷ்டியன்று சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பார்ப்போரை பரவசம் அடையச் செய்யும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.

முருகனுக்கு அபிஷேகம் செய்தல், ஆடைகளை வழங்குதல் மற்றும் உண்டியலில் காணிக்கை செலுத்துதல் மூலம் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். மனக்குழப்பம் உள்ளவர்கள் இங்கு வேண்டினால் மனக்குழப்பம் நீங்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிந்தை தெளிவடையும் என்கிறார்கள் பக்தர்கள், இந்த முருகப்பெருமானை வேண்டுவதும், வேண்டியது நிறைவேறிய பின் முருகனுக்கு பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், முடி காணிக்கை அளித்தல் உள்ளிட்டவற்றை செய்வதும் வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோவில், காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.

1 More update

Next Story