கோம்பை திருமலைராயப் பெருமாள் கோவில்

திருமலைராயப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி நாட்கள், புரட்டாசி மாத சனிக்கிழமைகள் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோம்பை என்னும் ஊருக்கு மேற்கே இருக்கும் மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது, திருமலைராயப் பெருமாள் கோவில். இங்குள்ள பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் வைகாசி மாதம் நடைபெறும் தேரோட்டம் மிகவும் விசேஷமானது. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக இக்கோவில் தேர் உள்ளது. இக்கோவில் தொழில் வளம் சிறக்கவும், செல்வம் பெருகவும் சிறப்பு மிக்க தலமாக திகழ்கிறது.
தல வரலாறு
முன்னொரு காலத்தில் கோம்பை என்னும் ஊரின் மேற்கே உள்ள மலைப்பகுதியில் சில குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள், மாடுகளை பராமரித்து வளர்த்து வந்தனர். தாங்கள் வளர்க்கும் மாடுகளில் இருந்து கிடைக்கும் பாலை தினமும் கோம்பை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஊர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து வாழ்க்கையை நடத்தினர்.
ஒரு நாள் அவர்களில் ஒரு பால்காரர், தான் வளர்த்த மாடுகளிடம் இருந்து கிடைத்த பாலை விற்பதற்காகக் கோம்பை நகருக்கு எடுத்துச் சென்றார். அவர் செல்லும் வழியில் ஓரிடத்தில் இருந்த மரத்தின் வேரில் கால் இடறிக் கீழே விழுந்தார். அப்போது, அவர் தலையில் சுமந்து வந்த பால் பானை கீழே விழுந்து உடைந்து, அதிலிருந்த பால் முழுவதும் தரையில் சிதறிப் போனது. “நாம் கொண்டு வந்த பால் முழுவதும், இப்படி வீணாகிப் போய்விட்டதே” என்று நினைத்த அவர், வருத்தத்துடன் வீடு திரும்பினார்.
மறுநாள், அவர் பாலை எடுத்துக் கொண்டு வந்த போதும், அதே இடத்தில் மீண்டும் கால் இடறி விழுந்து, அவர் கொண்டு வந்த பால் முழுவதும் தரையில் சிதறியது. இப்படியே சில நாட்கள், அந்த இடத்திற்கு வந்ததும் அவர் கால் இடறி விழுவதும், அவர் கொண்டு வரும் பால் தரையில் கொட்டிப் போவதும் வாடிக்கையாக இருந்தது. அதனால் வேதனையடைந்த அந்தப் பால்காரருக்கு ஒரு நாள் மிகுந்த கோபம் ஏற்பட்டது. கோபத்துடன் வீட்டிற்குச் சென்று ஒரு கோடரியை எடுத்துக் கொண்டு, மீண்டும் அந்த இடத்துக்குத் திரும்பி வந்தார்.
அங்கு, தினமும் தனது காலை இடறி விழச் செய்யும் மரத்தின் வேரை வெட்டினார். அப்போது அந்த வேரில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அதனைக் கண்டு ஆச்சரியத்தில் திகைத்த அந்த பால்காரர், கோடரியை அங்கேயே போட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பினார்.
அன்றிரவு, கோம்பை நகரின் ஆட்சியாளராக (ஜமீன்) இருந்தவரின் கனவில் தோன்றிய இறைவன், “ஒரு பால்காரர் தினமும் கோம்பை பகுதிக்கு பால் கொண்டு வருவார். அவர் வரும் வழியில், அவரது கால் இடறிக் கீழே விழச் செய்து, பால் முழுவதையும் நான் இருக்கும் இடத்தில் கொட்டச் செய்தேன். இப்படி சில நாட்கள் நடந்த நிலையில், இன்று அந்தப் பால்காரர், அவரது கால் இடறச் செய்யும் மரத்தின் வேரைக் கோடரியைக் கொண்டு வெட்டினார். நான், அந்த வேரிலிருந்து ரத்தம் பெருகச் செய்தேன். அதனைக் கண்டு பயந்து போன அவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டார். பால் சிதறி விழுந்த இடத்தில் நான் சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறேன். எனக்கு அந்த இடத்தில் கோவில் அமைத்து வழிபடுங்கள்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
மறுநாள் காலையில் ஆட்சியாளர், அந்தப் பால்காரரை வரவழைத்து விசாரித்தார். பின்னர் அவரிடம், முதல் நாள் இரவில் இறைவன் தனது கனவில் தெரிவித்த செய்தியையும் சொன்னார். இதனை அறிந்த ஊர் மக்கள் ஆட்சியாளர் வீட்டின் முன்பாக ஒன்றாக கூடினர். அதன்பிறகு, ஆட்சியாளர் அந்தப் பால்காரரை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஆட்சியாளரின் பின்னால் அங்கிருந்தவர்கள் அனைவரும் சென்றனர். அங்கு பால்காரர், தான் கால் இடறி விழுந்த இடத்தினை அடையாளம் காண்பித்தார்.
அந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி, பால் சிதறியிருந்த இடத்தில் இருந்த மண்ணை அகற்றிப் பார்த்த போது, அங்கு இறைவன் சுயம்புவாக இருந்ததைக் கண்டனர். அதன் பிறகு, ஆட்சியாளர் அந்த இடத்தில் இறைவனுக்குத் தனிக் கோவில் அமைத்தார் என்று இந்த ஆலய தல வரலாறு கூறுகிறது.
கோவில் அமைப்பு
இந்த கோவில் கோம்பை மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இக்கோவிலின் கருவறையில் பெருமாள் தலையைத் தென்பகுதியிலும், காலை வடபகுதியிலும் வைத்த படி, முகத்தினைக் கிழக்கு நோக்கிப் பார்த்தபடி கிடந்த நிலையில் (சயன கோலத்தில்) காட்சி தருகிறார். இங்கிருக்கும் இறைவன் 'திருமலைராயப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீதேவி, பூதேவி தயார்களும் உடனிருக்கின்றனர்.
இந்த ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் விநாயகப்பெருமான், ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தல விநாயகர் 'தும்பிக்கை ஆழ்வார்' என்னும் திருநாமத்தில் அழைக்கப்படுகிறார். இக்கோவிலுக்கான உற்சவர் 'ஸ்ரீரெங்கநாதர்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். விழாக்கால இறைவனான இவர் கோம்பை ஊரின் மையப் பகுதியில் கோவில் கொண்டிருக்கிறார்.
கோம்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியை ஒட்டி, பால்காரர் கொண்டு வந்த பாலைக் கொட்டச் செய்து தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட இறைவன் திருமலைராயப் பெருமாள் அருள்புரிவதாக சொல்லப்படும் ராமக்கல் மலை இக்கோவிலின் பின்புறம் இருக்கிறது. இம்மலையானது, தொலைவில் இருந்து பார்க்கும் போது சாந்த சொரூபமான மனிதனின் முகம் போன்று தெரிகிறது.
பால்காரர் கோடரியால் வெட்டியபோது, வெளியேறிய ரத்தம் படிந்த பகுதி இம்மலையில் ராமநாமம் இட்டது போன்று தெரிகிறது என்கின்றனர். இந்த காட்சி இறைவனின் அற்புதத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. இம்மலையை இக்கோவிலின் சிறப்புகளில் ஒன்றாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
விழாக்கள்
இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி நாட்கள், புரட்டாசி மாதச் சனிக்கிழமைகள், மார்கழி மாதத்தின் 30 நாட்கள் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர நாளில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. இவை தவிர, இங்கு விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வணிகர்கள் தங்கள் தொழில் வளம் செழிக்கவும், செல்வம் பெருகவும் இந்த ஆலயத்து இறைவனை வேண்டி வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோவில் இறைவனிடம் வேண்டியது கிடைக்கப் பெற்றவர்கள், இங்குள்ள இறைவனுக்குப் பாலாபிஷேகம் செய்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர். சிலர் முடிகாணிக்கை, அங்கப்பிரதட்சணம் செய்து வழிபடுவதும் உண்டு.
கோவில் தினமும் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் கோம்பை என்னும் ஊர் இருக்கிறது. இங்கிருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் மலைப் பகுதியில் திருமலைராயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தேனி, போடி, உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து கோம்பை செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.






