சுயம்புவாக அருள்பாலிக்கும் முடப்பக்காடு ஐயப்பன்


சுயம்புவாக அருள்பாலிக்கும் முடப்பக்காடு ஐயப்பன்
x

மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், முடப்பக்காடு பகுதியில் பழமையான ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுவாமி ஐயப்பன் சுயம்புமூர்த்தி ஆவார். அந்நியர்களின் படையெடுப்பையும் தாக்குப்பிடித்த சுவாமி ஐயப்பன், இன்றும் அதே இடத்தில் எளிமையாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கேரள மாநிலத்தில் அமர்ந்த கோல ஐயப்பன் ஆலயங்கள் நிறைந்திருந்தாலும் சுயம்பு ஐயப்பன் இவர் ஒருவரே என்பது தனிச் சிறப்பு ஆகும்.

தொன்மைச் சிறப்பு

மூவேந்தர்கள் காலத்தில் சேர மன்னர்களின் ஆட்சியிலும், பின்பு பல்லவர்கள் ஆட்சியிலும் பாலக்காடு பகுதி இருந்துள்ளது. பல்லவர்கள், சேர மன்னர்களுக்கு பிறகு வேறு சமூகத்தினர் சிலர் இப்பகுதியை ஆட்சி செய்தனர். இவர்கள் ஆண்ட பகுதி வள்ளுவ நாடு, கொல்லங்கோடு, பாலக்காடு என மூன்று பிரிவுகளாக இருந்தது. இதில் பாலக்காட்டை சேகரி வர்மா என்ற அரசன் ஆட்சி செய்தான். அதன் பின், இப்பகுதி கி.பி.1757-ல் கோழிக்கோடு அரசனான சாமூத்திரி, ஐதர் அலி, திப்பு சுல்தானை அடுத்து ஆங்கிலேயர் வசமானது.

அந்நியர் ஆட்சியில் சிதைக்கப்பட்ட எண்ணற்ற ஆலயங்களில் ஒன்றாக முடப்பக்காடு ஆலயமும் இருந்தது. ஆனால் இந்த ஆலய வளாகத்தில் எளிய ஆலயமாக இருந்த சாஸ்தா சுயம்புத் திருமேனி ஆலயம் பாதிக்கப்படவில்லை. அதன்பிறகு இந்த ஆலய வளாகம் பல நூறு ஆண்டுகள் கவனிப்பாரற்றுக் கிடந்தது.

இந்நிலையில் அப்பகுதியில் வாழ்ந்த அடியார் பெருமக்கள் இந்த ஆலயத்தின் உண்மை நிலையை அறிய, தேவப் பிரசன்னம் மற்றும் தாம்பூலப் பிரசன்னம் பார்த்தனர். அதில், இங்கு பழமையான இரண்டு ஆலயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி பெரிய ஆலயம் சுப்பிரமணியர் ஆலயம் என்றும், சிறிய ஆலயம் சாஸ்தாவின் சுயம்பு வடிவம் என்றும் தெரியவந்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த இவ்வூர் மக்கள், 2017-ம் ஆண்டு ஆலயம் எழுப்பும் பணியில் ஈடுபட்டனர். ஆலயத் திருப்பணியில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அடியவர் ஒருவர் இந்த ஆலயத்தின் புனரமைப் பிற்கு பெரிதும் உதவினார். அதன் பயனால் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்திருந்த சுப்பிரமணியர் சிலையும் அதே கலைநயத்தோடு வடிக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வந்துள்ளது.

கோவில் அமைப்பு

இவ்வாலயம் பாரதப்புழா ஆற்றின் வடகரையில் மேடான பகுதியில் அமைந்துள்ளது. எளிய சுயம்பு சாஸ்தா ஆலயம், பெரிய வடிவிலான சுப்பிரமணியர் ஆலயம், வலது பின்புறம் நாகர்கள் சன்னிதி என அனைத்தும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தென் கிழக்கில் மருத்துவ குணம் கொண்ட தீர்த்தக்கிணறும், ஒளஷதத் திருக்குளமும் உள்ளன. இத்தலம் மேற்புறம் பிரம்மாண்ட ஆறு, கீழ் புறம் வயலும் மலைகளும் சூழ்ந்து பசுமையான சூழலில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் தொன்மைக்குச் சான்றுகளாக, இதன் கட்டிட அமைப்பும், சுயம்பு ஐயப்பனின் திருமேனியும் காட்சி அளிக்கின்றன. இந்த ஆலயம் 'வெட்டுக்கல்' எனப்படும் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பல்வேறு பழங்கால ஆலயங்களில் இதே அமைப்பு காணப்படுகின்றது. இதற்கு மற்றொரு சான்றாக, இந்திய தொல்லியல் துறையின் நிர்வாகத்தில் உள்ள பட்டாம்பி நகரின் கைத்தளி மகாதேவர் ஆலய வளாகத்தில் உள்ள நரசிம்மர் மற்றும் அனுமன் சன்னிதிகள் உள்ளன.

கோவிலில், முருகப்பெருமானின் சன்னிதி வாசற்படிகள் கலைநயத்துடன் காணப்படுகின்றன. ஒருபுறம் கைலாய வாசலும், மறுபுறம் வைகுண்ட வாசலும் உள்ளது. இவற்றில் சிங்கமும், யானையும் சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன. இதே வடிவம் கைத்தளி மகாதேவர் வளாகத்தில் நரசிம்மர் கருவறையில் காணப்படுகின்றது.

முருகனின் சிலா வடிவம் மிகவும் கலைநயத்தோடு உள்ளது குறிப்பிடத்தக்கது. சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் வலது கையில் ஞானப்பழம் தாங்கியும், இடது கையை இடுப்பில் தாங்கியும் கூடவே தண்டத்தையும் தாங்கியபடி புன்னகை பூத்த முகத்துடன் அருள் காட்சி வழங்குகின்றார்.

முருகன் ஆலயத்தின் வலது முன்புறத்தில் எளிய சன்னிதியாக சுயம்பு ஐயப்பன் சன்னிதி அமைந்துள்ளது. ஸ்ரீ கோவில் எனும் கருவறையில் உள்ள ஐயப்பன் திருமேனி, பழமையானது மற்றும் சுயம்பு என்பதை உறுதி செய்கின்றது. இவர் திருமேனியை சுற்றி கேரள பாணி கூரை அமைந்திருந்தாலும், இவரின் மேல் பகுதி மூடப்படாமல் வானம் பார்த்த பூமியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார். இவரின் திருமேனி லிங்க திருமேனி வடிவமாக அமைந்துள்ளது. இதே அமைப்பு கேதார்நாத் சிவபெருமானுக்கும், சிங்னாப்பூர் சனி பகவானுக்கும் அமைந்துள்ளது இங்கே நினைவுகூரத்தக்கது. அந்த வகையில் சுவாமி ஐயப்பனின் அபூர்வக்கோலம் இப்புண்ணிய பூமியில் அமைந்துள்ளது.

இங்குள்ள பழமையான ஒரு கல் விளக்கு, அடியார் ஒருவரால் வழங்கப்பட்டதை உறுதி செய்யும் விதமாக விளக்கின் பாதத்தில் 'திருப்பாததாச கண்ணப்பட்டர்' என்ற மலையாள வரி காணப்படுகின்றது. இக்கோவில், சுவாமி ஐயப்பன் கோவில்தான் என்பதை (16-ம் நூற்றாண்டு) இந்திய அரசின் சென்சஸ் இயக்ககத்தின் பாலக்காடு மாவட்ட கோவில்கள் வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது. என்றாலும் கட்டிட அமைப்பு பல்லவர் காலத்தை உணர்த்துகின்றது.

விழாக்கள்

தைப்பூசத்தை மையமாக வைத்து பதினைந்து நாட் கள் பிரம்மோற்சவம், பூரம் விழா எளிமையாக நடத்தப் படுகின்றன. ஆலய பூஜைகளை நரிபட்ட மனா கேசவ பட்டத்திரி பரம்பரையினர் செய்து வருகின்றனர்.

தினமும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். என்றாலும் சுயம்பு ஐயப்பனை எப்போதும் தரிசிக்க ஏதுவாக கருவறைக் கதவுகள் அமைந்துள்ளன. ஆலயப் பணியாளர் வீடும் ஆலயத்தின் அருகில் உள்ளது.

அமைவிடம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி வட்டத்தில் முடப்பக்காடு திருத்தலம் அமைந்துள்ளது. பள்ளிப்புரம் - பட்டாம்பி நெடுஞ்சாலையில், பட்டாம்பியில் இருந்து கிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில், தமிழ்நாட்டின் ஆனைமலையில் உருவாகி கேரளத்தின் இரண்டாவது பெரிய நதியாக விளங்கும் பாரதப்புழா ஆற்றின் தென்கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. பட்டாம்பி வழியே குருவாயூர் செல்லும் அன்பர்கள் அபூர்வ சுயம்பு ஐயப்பனையும் தரிசிக்கலாம்.

1 More update

Next Story