மோட்சம் அருளும் காயாரோகணேஸ்வரர்


மோட்சம் அருளும் காயாரோகணேஸ்வரர்
x
தினத்தந்தி 18 April 2025 12:57 PM IST (Updated: 18 April 2025 12:59 PM IST)
t-max-icont-min-icon

காயாரோகணேஸ்வரர் கோவிலின் தீர்த்த குளம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழமையான நவகிரக தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குவது, அருள்மிகு கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில். காஞ்சி மாநகரின் தென்திசையில் வேகவதியாற்றின் வடகரையில் பிள்ளையார்பாளையம் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

தல சிறப்பு

கோவில்களின் நகரமான காஞ்சியில் அமைந்துள்ள எண்ணற்ற சிவத்தலங்களுள் மிக்க சிறப்புடைய தலங்கள் மூன்று. அவை திருவேகம்பம், கச்சபேசம் மற்றும் காயாரோகணம் ஆகும். இத்தலங்கள் முப்பெருந்தேவியராகிய காமாட்சி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் தவம் செய்து வழிபட்ட பெருமை உடையவை. இவற்றுள் காஞ்சிக்கு உயிரென சிறந்த உத்தம கோவிலாக தவத்திரு மாதவச் சிவஞான சுவாமிகள் உரைப்பது காயாரோகணம். காயம் என்றால் 'உடம்பு'. ஆரோகணம் என்றால் 'ஏற்றிக் கொள்ளுதல்'.

எல்லா உயிர்களும் உலகமும் அழிகின்ற பேரூழிக் காலத்தில் திருமால், பிரம்மன் ஆகியோரது சரீரத்தை ஒடுக்கி, சிவபெருமான் தன் தோள்மீது ஏற்றிக் கொண்டு காயா ஆரோகண இறைவனாக நடனம் ஆடியதாகவும், அதனால் இத்தலம் காயாரோகணம் என்ற பெயரைப் பெற்றது என்கிறது இத்தல புராணம்.

லட்சுமி தேவி, காயாரோகணேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சனை செய்து திருமாலைத் தன் கணவனாகப் பெற்றாள். குரு பகவான் வேகவதி ஆற்றின் தென்கரையில் உள்ள 'தாயார்குளம்' என வழங்கப்படும் காயாரோகணத் தீர்த்தத்தில் நீராடி காயாரோகணேசுவரரை வழிபட்டு, தேவர்களுக்குக் குருவாகும் வரம் பெற்றார். இதனால் இக்கோவிலில் லட்சுமி மற்றும் குரு பகவான் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. எமன், காயாரோகணேசுவரரை பூஜை செய்து தென்திசைக்குத் தலைவனாகும் பேறு பெற்றான். இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர் செல்வம், அறிவு மற்றும் வீடுபேறும் (மோட்சம்) பெறுவர் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு

இத்தலம், நுழைவு வாசலுடன் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசலில் குரு பகவான், பிரம்மா, சிவபெருமான், விஷ்ணு, பார்வதி தேவி சிற்பங்கள் அமைந்துள்ளன. நுழைவுவாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மூன்று நிலை ராஜகோபுரத்தைக் காணலாம். உள்ளே பலிபீடமும், நந்தியும் தரிசனம் தருகின்றன.

கருவறையில் மூலவர் காயாரோகணேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அமைந்து, லிங்க சொரூபத்தில் காட்சி தருகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம் காட்சி தருகிறது. கோட்டங்களில் விநாயகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. கருவறை கஜப்பிருஷ்ட வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தகைய வடிவமைப்பு, தொண்டை மண்டலத்திற்கே உரிய சிறப்பாகும். தெற்கு திசை நோக்கி அமைந்த தனிச் சன்னிதியில் கமலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பாள் காட்சி தந்து அருள்கிறார்.

மாவிரத லிங்கங்கள்

சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகற்பக விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகன், ஸ்ரீமகாலட்சுமி, நவகிரகங்கள், ஸ்ரீபைரவர், சூரிய பகவான் ஆகியோரின் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறத்தில் காணப்படும் மண்டபத்தில் நால்வர் சன்னிதி, நாகர்கள் சன்னிதி உள்ளன. மேலும் 'மாவிரத லிங்கங்கள்' என அழைக்கப்படும் ஆறு சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. அதில் இரண்டு ஆவுடையாருடனும், நான்கு ஆவுடையார் இன்றியும் காணப்படுகின்றன. இந்த சிவலிங்கங்களை 'மாவிரத முனிவர்கள்' என்று அழைக்கப்படும் ஆறு முனிவர்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மாவிரத லிங்கங்களுக்கு அருகில் ஸ்ரீபாலமுருகன் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார்.

'குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்வார்கள். நவக்கிரகங்களில் குருபகவான் அதிக நன்மைகளை தருபவர். ஆங்கிரஸ மகரிஷியின் மகனாக பிறந்தவர் குருபகவான். சிறந்த அறிவாற்றலால் 'பிரகஸ்பதி' என்ற பட்டத்தை பெறக்கூடிய அளவிற்கு உயர்ந்தவர். கோவிலுக்குள் மேற்கு திசை நோக்கி அமைந்த ஒரு தனி சன்னிதியில் குருபகவான் கைகளைக் கூப்பிய நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.

குரு பகவானின் அருள் இருந்தால் ஒருவருக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவது சிறப்பானதாகும். இத்திருக்கோவில், பக்தர்களால் 'குரு கோவில்' என்று அழைக்கப்படுகிறது. குருப்பெயர்ச்சி நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தாயார் குளம்

இந்த கோவிலின் தல விருட்சமாக 'வில்வ மரம்' உள்ளது. வில்வத்தின் இலை, காய், பழம் முதலானவை நோய்களை நீக்கும் சக்தி வாய்ந்த ஒரு மருந்தாகும். இக்கோவிலின் தல தீர்த்தமாக 'தாயார் குளம்' உள்ளது. மகாலட்சுமித் தாயார் அமைத்த தீர்த்தம் என்பதால் 'தாயார் குளம்' என்று அழைக்கப்படுகிறது. இது லட்சுமிகுண்டம், குருவார தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக குளங்கள் நான்கு மூலை அமைப்புடையதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தின் தீர்த்தம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு செல்வமும் ஞானமும் கிடைக்கும் என்பது ஐதீகம். தாயார் குளத்தின் மேற்குக் கரையில் எமதர்மராஜன் நிறுவி வழிபட்ட தருமலிங்கேசர் கோவில் அமைந்துள்ளது. நெய்தீபம் ஏற்றி தருமலிங்கேசரை வழிபட மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

முக்கிய விழாக்கள்

இத்தலத்தில் நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி காலத்தில் லட்சார்ச்சனையும், அர்ச்சனையும், குருப் பெயர்ச்சி விழாவும் நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் தனுர்மாத அபிஷேகங்களும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி முதலான விழாக்களும் வழக்கமாக நடைபெறுகின்றன. இக்கோவில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 07.30 மணி வரையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிள்ளையார்பாளையம். இந்த பகுதியில் முடங்கு வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

1 More update

Next Story