காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்


காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்
x
தினத்தந்தி 5 Aug 2025 6:00 AM IST (Updated: 5 Aug 2025 6:00 AM IST)
t-max-icont-min-icon

வேண்டுதல் நிறைவேறுவதற்காக காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு மக்கள் தக்காளி சாறினால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

சிவகங்கை

செட்டிநாட்டுச் சீமை என்று அழைக்கப்படும் சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நகரான காரைக்குடியின் மீனாட்சிபுரத்தில் உள்ளது முத்துமாரியம்மன் கோவில்.

தல வரலாறு

1956-ம் ஆண்டு லலிதா என்ற 8 வயது சிறுமி உடல் முழுவதும் அம்மையுடன் மீனாட்சிபுரத்திற்கு வந்தாள். சமயபுரத்தில் இருந்து தனியாக வந்த அந்த சிறுமியை அப்பகுதி மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தார்கள்.

சில நாளில் சிறுமியின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எல்லாம் அருள்வாக்காக வெளிவந்து பல அற்புதங்களை நிகழ்த்தியது. அடுத்த சில நாளில் அந்த சிறுமியின் உடல் மீதிருந்த அம்மை முத்துக்கள் போல் முளைத்தது. சிறுமி படுத்த படுக்கையானாள். பலர் சிறுமியை கிண்டலடித்தனர். ஆனால் அதை அந்த சிறுமி பொருட்படுத்தவில்லை.

ஒருநாள் தன்னை ஏளனப்படுத்திய ஒருவரை பார்த்து, "உன் தோட்டத்தில் ஒரு கிணறு இருக்கிறதல்லவா. அந்தக் கிணற்றடியில் இருக்கும் தக்காளிச்செடியில் ஒரே ஒரு தக்காளி இருக்கும். அதைப் பறித்துக் கொண்டு வா" என்றாள். அவரோ! சிரித்தபடியே, என் வீட்டிலா? கிணற்றடியிலா? தக்காளிச் செடியா? எனக்கே தெரியாமல் செடியாவது, பழமாவது எனக் கிண்டலாகப் பதில் கூறினார்.

சிறுமியோ, "நீ போய் பார். தக்காளியைக் கொண்டு வா" எனக் கூறினாள். அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு கிணற்றடியில் திடீரென முளைத்திருந்த தக்காளிச் செடியில் ஒரே ஒரு பெரிய தக்காளிப்பழம் மட்டும் இருப்பதை கண்டு அதிர்ந்து போனார். அப்போதுதான் அவருக்கு அந்த தெய்வச் சிறுமியின் மகிமை புரிந்தது. உடனே தக்காளிப்பழத்தை பறித்து சிறுமியிடம் கொடுத்து அவளது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

ஒருநாள் அந்த தெய்வச்சிறுமி, 'நான் மகமாயியாக இதே இடத்தில் இருந்து அருள்பாலிப்பேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டால் நோய்நொடிகள் தீரும். மனமகிழ்ச்சி கூடும். கன்னியருக்கு மணமாகும். தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல நலன்களும் வீடு தேடி வந்து சேரும்' எனக்கூறி முக்தியடைந்தாள்.

அவளை முத்துமாரியாகக் கருதி மக்கள் வழிபட்டனர். அதன் பின்னர் 1956-ம் ஆண்டு அன்னை முத்துமாரியம்மன் கோவில் அமைந்தது.

கோவில் அமைப்பு

ஊரின் மையப் பகுதியில் இருக்கும் கோவில் முன் வளைவைக் கடந்து சென்றால் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் அழகாக காட்சி தருகிறது. கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலை நயங்களுடன் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தை வணங்கி கோவிலுக்குள் நுழைந்தால், மகா மண்டபத்தில் உள்ள தூண்கள் வண்ணமயமாக காட்சி தருகின்றன. மகா மண்டபத்தை அடுத்து கொடிமரம் அமைந்துள்ளது. இது தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. ஸ்ரீ முத்து மாரியம்மன் என்ற பெயர் பலகைக்கு கீழே ஸ்ரீ கஜலட்சுமி இருபுறமும் யானைகளுடன் இருக்கும் சுதை வடிவ சிற்பம் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபத்தில் விநாயகப் பெருமான், முருகப்பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

கர்ப்பக் கிரகத்தில் நின்ற கோலத்தில் மூலவரான முத்துமாரியம்மன் கருணை ததும்பும் விழிகளோடு தரிசனம் தருகிறார். அதற்கு முன்னர் பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மீது அம்மன் சிரசு அமைக்கப்பட்டுள்ளது. முத்து மாரியம்மன் உற்சவ விக்ரகம் பாதுகாப்பின் பொருட்டு கர்ப்பக் கிரகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை

பக்தர்கள் திருமண வரம் வேண்டியும், குழந்தைப் பேறுக்காகவும் அம்மனை பிரார்த்தனை செய்கின்றனர். காவடி, பால்குடம், முளைப்பாரி, மதுக்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், பூமிதித்தும் அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

திருவிழாக்கள்

மாசி மாதக் கடைசி செவ்வாய்க்கிழமை அம்பாளுக்கு காப்புக்கட்டி விழா தொடங்கும். பங்குனி முதல் செவ்வாயில் அம்பாளுக்கு பொங்கல் வைத்தல், மது முளைப்பாரி, கரகம், அக்கினிச்சட்டி எடுத்தல் சிறப்பாக நடத்தப்படும். பால்குடங்கள், பூக்குழி இறங்குதல் நடக்கின்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்துவர். ஊர் மகிழும் மாசி பங்குனி விழா வருடந்தோறும் 39 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலர் அம்மனுக்கு நேர்ந்து பால்குடம் எடுப்பது சிறப்பானதாகும். திருவிழா அன்று காலை முத்தாலம்மன் கோவில் ஊரணியில் நீராடிய பக்தர்கள், அங்கிருந்து பால்குடங்களை ஏந்தி கொப்புடையம்மன் கோவில் வீதி, செக்காலை ரோடு, முத்துப்பட்டணம் வழியாக முத்துமாரியம்மன் கோவிலை அடைவார்கள். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் ஆனந்த வெள்ள அருவியாக நடக்கும். கோவிலில் கரகம், மது, முளைப்பாரி நிகழ்ச்சி நடைபெறும். மறுநாள் காலை 9.30 மணிக்கு கோவில் காவடி, பால்குடம், பூக்குழி இறங்குதல், மாலை முளைப்பாரி புறப்படும் நிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து அம்மன் திருவீதி உலா, சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். ஆடி மாதம் அனைத்து நாட்களிலும் சிறப்பு அபிஷேகமும் கோமாதா பூஜையும் நடைபெறும்.

கோவில், காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியின் மையப் பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

தக்காளி சாறு அபிஷேகம்

அம்மனுக்கு பொதுவாக இளநீர்,பன்னீர், திருநீறு, பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்படும். ஆனால் காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மாசி, பங்குனி பொங்கல் திருவிழாவின்போது அம்மனுக்கு தக்காளி பழச்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தக்காளி பழங்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தி, பின் அந்த பழங்களை கொண்டு சாறு பிழிந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இது ஒரு தனித்துவமான மற்றும் பிரபலமான திருவிழாவாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.

லலிதா என்ற பெயரில் சிறுமியாக வந்த அம்பாள் கடைசியாக, பக்தரிடம் தக்காளியை காணிக்கையாக கேட்டதால் தக்காளியை காணிக்கையாக செலுத்தி வழிபடும் நடைமுறை தொடர்கிறது.

1 More update

Next Story