பச்சூர் சித்தி காளியம்மன் கோவில்


பச்சூர் சித்தி காளியம்மன் கோவில்
x
தினத்தந்தி 24 Jun 2025 12:18 PM IST (Updated: 24 Jun 2025 12:25 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் நோய், நொடியில் இருந்து விடுபட வேண்டி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் பச்சூரில் உள்ள நூலாற்றங்கரையில் அமைந்துள்ளது, சித்தி காளியம்மன் கோவில். நோய் நொடிகள், பில்லி சூனியம் போக்கி, குழந்தை பாக்கியம், திருமண யோகம், அருளும் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.

தல புராணம்

முன்னொரு காலத்தில் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து பல வரங்களை பெற்றார். இதனால், தானே அனைவரிலும் மேலானவன் என்ற ஆணவம் கொண்டார். ஒரு சமயம் பார்வதி தேவியை சுக்ராச்சாரியார் சந்தித்தார். அப்போது ''உன்னைவிட நானே பெரியவன். அதனால் நீ என்னை வணங்க வேண்டும்'' என்று கட்டளையிட்டார். அதற்கு பார்வதி தேவி, ''உன்னை நான் வணங்க முடியாது'' என மறுத்தார். இதனால் கோபம் கொண்ட சுக்ராச்சாரியார், ''உன்னை வணங்கும் பூலோக மக்களை நான் கொன்று குவிப்பேன். அப்போது நீ என்னை வணங்குவாய்'' என சபதமிட்டார். தனது சீடரான அசுரனை பூலோகம் அனுப்பி, காலரா, அம்மை போன்ற தீவிரமான நோய்களை மக்களுக்கு ஏற்படுத்தினான். இதனால் கடும் அவதியுற்று பலர் மாண்டனர்.

இதையடுத்து வைகாசி விசாகம் அன்று ஊர் மக்கள் ஒன்றுகூடி சிவனையும், பார்வதி தேவியையும் மன்றாடி வணங்கினர். அன்று இரவு காத்தான் என்பவரது கனவில் தோன்றிய பார்வதி தேவி, ''என்னை நூலாற்றங்கரையில் காளியாக பிரதிஷ்டை செய்யுங்கள். நான் மக்களை காப்பேன்'' என்றார்.

இதையடுத்து காளியம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்பு காளியம்மன் அசுரனை வதம் செய்தார். மக்களும் நோய் நொடியில் இருந்து விடுபட்டு நிம்மதி அடைந்தனர். அதன்பின் மக்களின் வேண்டுகோளின்படி இத்தலத்திலேயே காளியம்மன் அருள்பாலித்து வருகிறார்.

கோவில் அமைப்பு

கோவில் ராஜகோபுரத்துடன் கம்பீரமாக அமைந்துள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் மூல விக்ரகமாக சித்தி காளியம்மன் அருள்பாலிக்கிறார். பரிவார மூர்த்திகளாக விநாயகர், சிவன், பெரியாட்சி, காத்தவராயன், பொம்மி, ஆரியமாலா ஆகியோர் காட்சி தருகின்றனர். வெளிபிரகாரத்தில் பிள்ளையார், ராகு, கேது, ஐந்து தலை நாகம் அமைந்துள்ளன. இத்தலத்தின் தல விருட்சமாக அரசமரம், வேம்பு, வன்னி ஆகியன உள்ளன.

வழிபாடு

மாதந்தோறும் பௌர்ணமி பூஜையும், அன்னதானமும் நடைபெறும். ஆடி, தை மாதத்தில் பெண்கள் விளக்கு பூஜையும் நடைபெறுகின்றன. ஆடிப்பூரம், கார்த்திகை தீப திருவிழா, கன்னி பொங்கல் திருவிழா, மார்கழி மாதம் அதிகாலை பூஜை, ஆடி மாதம் கஞ்சி ஊற்றுதல், வைகாசி மாதம் 5 நாட்கள் அசுர சம்ஹார பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பூச்சொரிதல், சந்தன காப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜை, பாலாபிஷேகம், அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம், காளி படையல், காத்தவராயனுக்கு படையல் போன்ற நிகழ்ச்சிகளும் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றன.

அரச மரம், வேப்ப மரத்துடன் கூடிய ராகு, கேது பகவான் அமைந்துள்ளதால், திருமணம் யோகம், குழந்தை பாக்கியம் வேண்டி வருபவர்கள் இங்குள்ள மரத்தை சுற்றி வந்து வழிபடுகிறார்கள். நோய், நொடியில் இருந்து விடுபட வேண்டி வருபவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும், திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர்.

அமைவிடம்

காரைக்கால்-திருநள்ளார் மெயின்ரோட்டில் உள்ளது பச்சூர் கிராமம். இங்கு நூலாற்றங்கரையில் அமைந்துள்ளது சித்தி காளியம்மன் கோவில்.

1 More update

Next Story