கல்விச்செல்வம் அருளும் கழுகாசல மூர்த்தி


இக்கோவிலின் கருவறையானது மலையின் குகையில் அமைந்து இருப்பதால், மலையே கோபுரமாக விளங்குகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது கழுகுமலை. இந்த ஊரில் அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி திருக்கோவில் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றதாக கருதப்படுகிறது. இது முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு என்றும், தென்பழனி என்றும் பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல இறைவனை புகழ்ந்து பாடியுள்ளார்.

தல புராணம்

ராமாயணத்தில் சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தடுக்க முயன்ற ஜடாயு, ராவணனால் கொல்லப்பட்டான். இதையடுத்து ஜடாயுக்கு ராமனால் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இதை அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் தம்பியான சம்பாதி என்ற கழுகு முனிவர் மிகவும் வருந்தினார். தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகூட செய்ய முடியவில்லையே. இதனால் ஏற்பட்ட பாவம் தீர நான் என்ன செய்வது என்று ராமனிடம் வேண்டினார். அதற்கு ராமன், "நீ கஜமுக பர்வதத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பூஜை செய்து வந்தால் இதற்கான விடை கிடைக்கும்" என்றார்.

பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. கஜமுக பர்வதத்திலேயே சம்பாதி தங்கியிருந்தார். அப்போது, முருகன் சூரபத்மனை வதம் செய்வதற்காக இவ்வழியாக வந்தார். அந்நேரத்தில் முனிவர்களையும், மக்களையும் சூரபத்மனின் தம்பி தாரகாசூரன் துன்புறுத்திக் கொண்டிருந்தான். முருகன் தாரகாசூரனை ஐப்பசி பஞ்சமி திதியில் வதம் செய்து, களைப்பில் கஜமுக பர்வதத்தில் ஓய்வெடுத்தார். அவர் தங்குவதற்கு இடம் தந்த சம்பாதி, சூரபத்மனின் இருப்பிடத்தையும் காட்டினார். இதனால் மகிழ்ந்த முருகன் சம்பாதிக்கு முக்தி தந்தார். சம்பாதி தன் சகோதரனுக்கு ஈமக்கிரியைகள் செய்ய முடியாத பாவமும் நீங்கியது. கழுகு முனிவரான சம்பாதி வசித்த கஜமுக பர்வதமே அவரது பெயரால் 'கழுகுமலை' எனப் பெயர் பெற்றது. இங்கு அருள்பாலிக்கும் மூர்த்தி என்பதால் இத்தல இறைவன் 'கழுகாசலமூர்த்தி' என்று அழைக்கப்படுகிறார்.

முற்காலத்தில் இந்த கோவில் இருந்த இடம் வனமாக இருந்துள்ளது. உவணகிரி என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு தெற்கே, பழங்கோட்டை என்னும் ஊரில் அதிமதுர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான்.

ஒரு சமயம் அந்த மன்னன் வேட்டையாடுவதற்காக இந்த வனப்பகுதிக்கு வந்தான். அப்போது மிகுந்த களைப்பின் காரணமாக ஓய்வெடுக்க எண்ணிய மன்னன், ஒரு வேங்கை மரத்தடியில் அமர்ந்து, அப்படியே தூங்கிவிட்டான். நண்பகலில் திடீரென பூஜை செய்வது போன்றும், மணி ஒலிப்பது போன்றும் சத்தம் கேட்க, மன்னன் கண் விழித்துப் பார்த்தான். அப்போது அங்கு பசு ஒன்று பாறையில் தானாக பாலை சுரந்து கொண்டு இருந்ததைக் கண்டான். சிறிது நேரம் கழித்து அந்த பாறையை அகற்றிப் பார்த்தபோது, அங்கு ஒரு குகையும், அதனுள் மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானும் காட்சியளித்தனர்.

இதனால் மனம் மகிழ்ந்த மன்னன், இறைக் காட்சியால் உள்ளம் நெகிழ்ந்து வழிபட்டான். இத்தல இறைவன் தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தி என்றும், தேவர்கள் வந்து பூஜிக்கின்ற மூர்த்தி என்றும் உணர்ந்ததால், மன்னன் மக்கள் வழிபட பல வசதிகள் செய்தான் என்கிறது தல வரலாறு.

கோவில் அமைப்பு

இக்கோவிலின் கருவறை மலையின் குகையில் அமைந்து இருப்பதால், மலையே கோவில் கோபுரமாக விளங்குகிறது. இதனால் இக்கோவிலை சுற்றி வர வேண்டுமானால் மலையையே சுற்றி வர வேண்டும்.

ஆலயத்தில் முருகப்பெருமான், கழுகாசலமூர்த்தி என்ற திருநாமம் கொண்டு மயில் மீது அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். ஒரு முகம், ஆறு திருக்கரங்களுடன் தன் இடது காலை மயிலின் கழுத்திலும், வலது காலை தொங்க விட்டும், கையில் கதிர்வேலுடனும் காட்சி தருகிறார். இறைவனின் இடப்பக்கத்தில் மயிலின் தலைப்பகுதி அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். முருகப்பெருமானின் முன் பக்கவாட்டில் வள்ளி - தெய்வானை தேவியர் இருவரும் இறைவனை நோக்கும் விதத்தில் அமைந்துள்ளது இக்கோவிலின் விசேஷமாகும். ஆலயத்தின் தீர்த்தம், 'குமார தெப்பம்' ஆகும்.

கழுகாசலமூர்த்தி கோவில் அருகே உள்ள மலையின் உச்சியில் பிள்ளையார் கோவிலும், கோவிலுக்குச் செல்லும் வழியில் மூன்று சமண சிற்பத்தொகுதிகளும், அய்யனார் சுனையும் உள்ளன.

பொதிகை மலையில் உறையும் அகத்திய முனிவருக்கு ஞானத்தை அருளும் ஞான குருவாகவும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் தோஷத்தை நீக்கி மங்கள வாழ்வளிக்கும் மூர்த்தியாகவும் இத்தல முருகப் பெருமான் திகழ்கிறார். எனவே இத்தலம் 'குரு-மங்கள் சேத்திரம்' என்று போற்றப்படுகிறது. இந்த கழுகாசல மூர்த்தியை அகத்தியர் தினமும் பூஜிப்பதாக ஐதீகம்.

கோவில் தோற்றம்

இங்கு முருகனுக்கு தனி பள்ளியறையும், சிவபெருமானுக்கு தனி பள்ளியறையும் அமைந்திருப்பது ஓர் தனிச்சிறப்பாகும். எனவே இரண்டு பள்ளியறை பூஜை நடக்கும் கோவிலாக இத்தலம் உள்ளது. இதனால் இங்கு வந்து வழிபடும் மாணவர்களுக்கு கல்விச்செல்வம் குறைவில்லாது கிட்டும் என நம்பப்படுகிறது.

திருவிழாக்கள்

இந்த ஆலயத்தில் வைகாசி விசாகம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டியில் 13 நாட்களும், தைப்பூசத்தில் 10 நாட்களும், பங்குனி உத்திரம் 13 நாட்களும் திருவிழா கொண்டாடப்படுகிறது. கந்தசஷ்டி தொடங்கி 5-ம் நாளில் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்வும், 6-ம் நாளில் சூரசம்ஹாரமும் சிறப்பாக நடைபெறும். தினந்தோறும் ஐந்து கால பூஜைகள் நடக்கிறது.

இக்கோவிலில் உலக மக்களின் நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் ஆண்டுதோறும் மலர்க் காவடி எடுத்து வழிபடும் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இத்தல முருகப்பெருமானை மனமார நினைத்து, உள்ளம் உருக வழிபடுவோருக்கு வீடுபேறு அளிக்க வல்ல அற்புதமான திருத்தலமாக இது கருதப்படுகிறது.

கோவில், காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

ராஜபாளையம்-திருநெல்வேலி சாலையில் உள்ள சங்கரன் கோவிலில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து (சங்கரன்கோவில் செல்லும் வழி) 22 கிலோமீட்டர் தொலைவிலும் கழுகுமலை உள்ளது. நெல்லை, தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, தூத்துக்குடி, மதுரை போன்ற இடங்களில் இருந்து கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது.

1 More update

Next Story