சோவல்லூர் மகாதேவர் கோவில்


சோவல்லூர் மகாதேவர் கோவில் பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோவிலாகும்.

கேரளாவின் புகழ்பெற்ற 108 சிவன் கோவில்களில் ஒன்றாகவும், பரசுராமர் நிறுவிய கோவிலாகவும் விளங்குகிறது, சோவல்லூர் சிவன் கோவில். குருவாயூரைச் சுற்றியுள்ள ஐந்து முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாகவும் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

தல புராணம்

சோவல்லூர் - மழவன்னூரைச் சேர்ந்த சிவனடியார் ஒருவர், நாள்தோறும் திருச்சூர் சென்று திருச்சூர் வடக்குநாதரை தரிசித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். பல ஆண்டுகள் இந்த வழக்கம் நீடித்தது. ஆனால், வயதான நிலையில் இவரால் திருச்சூர் சென்று வடக்குநாதரை தரிசிக்க முடியவில்லை. இதனால் மனம் வருந்தி வடக்குநாதரிடம் முறையிட்டார். இவரின் பக்திக்கு மனமிரங்கிய வடக்குநாதர், சோவல்லூர் தலத்திற்கு நேரில் வந்து அடியாருக்கு அருள்புரிந்ததாக தல புராணம் கூறுகிறது.

ஆலய அமைப்பு

சோவல்லூர் மகாதேவர் கோவில் பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட ஒரு அழகியக் கோவிலாகும். இந்த ஆலயம் சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. பெரிய கட்டுமானமாக அமைந்துள்ள இக்கோவிலின் தனிச்சிறப்பு, இங்குள்ள பலிகல்லாகும். இது சுமார் 10 அடி உயரம் கொண்டது. இதனால், வெளியில் இருந்து பார்த்தால் மூலவர் சிவலிங்கத் திருமேனி தெரிவதில்லை. இக்கோவிலின் வடமேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கிய சுப்பிரமணிய சுவாமி சன்னிதி உள்ளது. 2001-ம் ஆண்டு கோவில் புனரமைப்பின் ஒரு பகுதியாக சுப்பிரமணிய கோவில் அமைக்கப்பட்டது.

தென்கிழக்கில் நரசிம்மர் அருகே சுப்பிரமணியர், வட கிழக்கில் அனுமன் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிலின் பிரதான சன்னிதியான 'ஸ்ரீ கோவில்' எனும் கருவறை, வட்ட வடிவில் அமைந்துள்ளது. இது இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது. கருவறையின் இரண்டாவது கூரை தாமிரத் தகடுகளால் ஆனது. உச்சியில் தங்கக் கலசம் அழகு சேர்க்கிறது.

ஸ்ரீ கோவிலில் சிவ பெருமான் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். அன்னை பார்வதி கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இது செங்கனூர் சிவாலய அமைப்பை நினைவுபடுத்துகின்றது. கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் உயிரோட்டமான சுவரோவியங்கள் நிறைந்துள்ளன. அதில், மகாபாரதத்தின் காட்சிகள் அழகாக வரையப்பட்டுள்ளன. ஆலயக் கருவறைச் சுற்றில் விநாயகர் மற்றும் சப்த மாதர்கள் சன்னிதிகள் அமைந்துள்ளன.

நாகத்தையே குடையாக கொண்ட சிவபெருமான் இத்தலத்தில் அருள் வழங்கி வருவதால் நாகங்களின் பயத்திலிருந்து தங்களுக்கு தெய்வீகப் பாதுகாப்பு இருப்பதாக கோவிலின் சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்கள் நம்புகிறார்கள். மேலும், இத்திருக்கோவில் குளத்தால் கோவில் மற்றும் சுற்றுப்புற மக்கள் அனைவரும் நல்ல குடிநீர் வசதியை பெறுகின்றனர்.

திருவாதிரை மகோற்சவம்

ஆண்டுதோறும் ஜனவரி 2-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 12 நாட்களுக்கு திருவாதிரை மகோற்சவம் நடைபெறுகிறது. இதில் பார்வதி தேவிக்கு பட்டும், தாலியும் அணிவித்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. பக்தர்கள் உரிய கட்டணம் செலுத்தி பட்டு, தாலி மற்றும் மாங்கல்ய பூஜைகளில் பங்கேற்கலாம். இதன்மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும், திருமணம் ஆனவர்கள் சுமங்கலியாக வாழ்வார்கள் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இவ்விழாவில் நாள்தோறும் பாராயணம், ஆன்மிக சொற்பொழிவுகள், நடன நிகழ்ச்சிகள், அன்னதானம் முதலானவை நடைபெறுகின்றன. இது தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் திங்கட்கிழமையும் கோவிலில் 1000 பேருக்குமேல் அன்ன தானம் நடைபெறுகிறது.

காலை 4.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் (குருவாயூரப்பன் கோவில்) உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் பழம்பெரும் சோவல்லூர் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.

1 More update

Next Story