ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோவிலில் இன்று தேரோட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை

கோப்புப்படம்
தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மலைக்கோயில் என்றழைக்கப்படும் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில். இக்கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த (பிப்ரவரி) மாதம் 10-ந் தேதி ஓசூர் தேர்பேட்டையில் பால் கம்பம் நடப்பட்டு தேர் கட்டும் பணிகள் தொடங்கியது.
கடந்த 7-ந் தேதி ஓசூர் கல்யாண சூடேஸ்வரர் சாமி குழுவினரால் அங்குரார்ப்பணம், ஓசூர் வீரசைவ லிங்காயத்து மரபினரால் திருக்கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து ஓசூர் தேர்பேட்டையில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோவிலில் தினமும் சிம்ம வாகனம், மயில் வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட உற்சவ நிகழ்ச்சிகளும், சாமி வீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
நேற்று இரவு கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வர சாமி யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில், இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மாநகராட்சி மேயர் சத்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, ஓசூர் உதவி கலெக்டர் பிரியங்கா மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா என 3 மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவையொட்டி, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேரோட்டத்தை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கைகளுடன் விடிய, விடிய ராவண உற்சவம் மற்றும் பல்லக்கு உற்சவமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு பச்சைக்குளத்தில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, ஓசூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
இன்று தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ஆலயம் தேர்த் திருவிழா நாளான மார்ச்14ம் தேதியன்று ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி வட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள்( சார் ஆட்சியர் அலுவலகம், ஓசூர் உட்பட) மற்றும் பள்ளி/கல்லுரிகளுக்கு (அரசுப் பொதுத் தேர்வை தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள், செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் உள்ளூர் விடுமுறை நாளன்று ஒசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்" என்று அதில் தெரிவித்திருந்தார்.