கடம்போடு வாழ்வு கைலாசநாதர் திருக்கோவில்

கடம்போடு வாழ்வு சிவன் கோவிலில் பிரதோஷங்கள், மகா சிவராத்திரி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடம்போடுவாழ்வு கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் இவ்வூர் கடம்ப மரங்கள் நிறைந்த ஊராக விளங்கியதாலும், கடம்ப மரங்கள் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரிந்ததாலும், இத்தலம் 'கடம்போடு வாழ்வு' எனப் பெயர் பெற்றதாகத் தலவரலாறு கூறுகின்றது.
ஆலய அமைப்பு
இவ்வாலயம் மன்னர் காலத்தை சேர்ந்தது என்பதற்கு இதன் கட்டிட அமைப்பும், இங்குள்ள மூலவர் வடிவங்களும் சான்றாக உள்ளன. ஊரின் வடகிழக்கு திசையான ஈசான்ய மூலையில் கிழக்கு நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. கோவிலில் முதலில் நம்மை வரவேற்பது பழமையான திருக்குளம். அதையடுத்து பலிபீடம் உள்ளது. அடுத்து நந்திதேவர் காட்சி தருகின்றார். இதைக் கடந்ததும் நேர் எதிரே மூலவர் கைலாசநாதர், லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி எழிலாகக் காட்சி தருகின்றார்.
நுழைவு வாசலின் இடது புறம் இடம்புரி விநாயகர் காட்சி தருகின்றார். இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர். இது தவிர உட்புறத்தில் மற்றொரு நந்திதேவர் இறைவனை நோக்கி அமைந்துள்ளார். நந்தியின் இடதுபுறம் மற்றொரு விநாயகர் அமர்ந்துள்ளார்.
கைலாசநாதரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் அன்னை பொன்மலைவல்லி அம்மாள் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாய் கருணை வடிவுடன் அருள்பாலிக்கின்றார்.
முருகன் சன்னதி
இறைவன், இறைவி சன்னிதிகளின் வலது பின்புறம் தென்மேற்கில் முக்குறுணி விநாயகர், இடது பின்புறம் வடமேற்கில் முருகப்பெருமான் சன்னிதி அமைந்துள்ளது. இவரை இவ்வூர் மக்கள் 'தேசிக மெய்க்கண்ட ஆறுமுக நயினார்' என அழைக்கின்றனர். கலைநயத்துடன் உள்ள இவரின் சிலா வடிவம் சோழர் கால பாணியைச் சார்ந்ததாக அமைந்துள்ளது. வலது மேற்கரங்களில் ஆயுதங்கள் தாங்கியும், இடது கீழ்க் கரங்களில் அபய - வரத முத்திரை காட்டியும் மயில்மீது அமர்ந்தபடி காட்சி தருகின்றார்.
தெற்கு நோக்கிய தேவ மயில், தன் வாயில் நாகத்தை கவ்வியபடி எழிலாக காட்சி தருகின்றது. கருங்கல்லிலான திருவாச்சி, முருகப்பெருமானுக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. முருகன் சன்னிதிக்கு அருகில் தெற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் வடகிழக்கில் காலபைரவர் அமைந்துள்ளார். கோவில் அருகே தென்னை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்து பசுமையாக காட்சி தருகின்றன.
இக்கோவிலில் பிரதோஷங்கள், மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. கடம்பமரம் ஆதித் தலமரமாக விளங்கினாலும், இன்று இவ்வாலயத்தின் தலமரங்களாக பழைமையான வில்வ மரமும், நாகலிங்க மரமும், திருவோடு மரமும் உள்ளன. தலத்தீர்த்தமாக ஆலயத்தின் வெளியில் அமைந்துள்ள பழமையான திருக்குளம் உள்ளது.
பிற ஆலயங்கள்
இவ்வூரின் பழைமைக்கு சான்றாக கடம்ப விநாயகர், பெருமாள் கோவில், சுந்தராட்சி அம்மன், உச்சி மாகாளி அம்மன், கருப்பசாமி, அக்கினி மாடன்- அக்னி மாடச்சி, செல்வ விநாயகர் கோவில்கள் உள்ளன. இது தவிர கரைசாமி கோவில், ஆத்தங்கரை சுடலை, ஊர்க்காட்டுசாமி கோவில், ஒத்தைப்பனை சுடலை சாமி கோவில், களத்துசாமி, ஈஸ்வரி அம்மன் முதலான பழம்பெரும் சிற்றாலயங்கள் அமைந்துள்ளன. ஊரை சுற்றி பிரபலமான நாங்குநேரி வானமாமலை பெருமாள், திருக்குறுங்குடி அழகிய நம்பி கோவில், திருமலை நம்பிக்கோவில், வள்ளியூர் முருகன், களக்காடு கோமதி அம்மன் உடனுறை சத்தியவாகீஸ்வரர் திருக்கோவில் போன்றவை அமைந்துள்ளன.
அமைவிடம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில், களக்காடு - நாங்குநேரி வழித்தடத்தில் 7 கிலோமீட்டர் தொலைவில் கடம்போடுவாழ்வு ஆலயம் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.