சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவில் கோமதி அம்பாள், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அவ்வகையில் இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலையிலும் மாலையிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது
7-ம் திருநாளான நேற்று முன்தினம் காலை சிவபெருமானை சங்கர நாராயணராக காட்சியளிக்க வேண்டி, தவம் இருக்கும் கோமதி அம்பாள், கோ சம்ரக்சனை அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 11.30 மணிக்கு ஸ்ரீ வன்மீகநாதர் வீதி உலா, இரவு 12 மணிக்கு கோமதி அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
9-ம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை கோமதி அம்பாள் தேரில் எழுந்தருளியதும், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் அரசியல் பிரமுகர்கள், மண்டகப்படிதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்து அம்பாளை வழிபட்டனர்.
இரவு 10 மணிக்கு கோமதி அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7ஆம் தேதி) நடைபெற உள்ளது.