ஆடித் திருவிழா: சீர்காழி இரட்டை காளியம்மன் கோவிலில் பால்குட வழிபாடு

அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10-நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு உற்சவம் கடந்த 25-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. சட்டநாதர் சுவாமி கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பால் குடங்கள் எடுத்து மேளதாளம், வாண வேடிக்கை முழங்க தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து இரட்டை காளியம்மன் கோவிலை சென்றடைந்தனர். பின்னர், அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம், திரவிய பொடி மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல் சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.