தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித் திருவிழா தொடங்கியது

சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கோவில் பிரகாரத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப் பெருந்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழாவிற்காக நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் போன்றவை நடைபெற்றன.
தொடர்ந்து இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் கோவிலின் பிரகாரத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்று பக்தி முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், கோவில் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் பட்டாச்சாரியார்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்