ஆடி 3-வது செவ்வாய்: குமரி மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி  3-வது செவ்வாய்: குமரி மாவட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி 3-வது செவ்வாயையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி

அம்மன் கோவில்களில் ஆடி மாதம் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடும் ஒன்று. அவ்வகையில் ஆடி மாத மூன்றாவது செவ்வாய்க்கிழமையான இன்று காலை முதலே அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக பெண் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில், வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், வடசேரி காமாட்சி அம்மன் கோவில், நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், தாழக்குடி ஔவையாரம்மன் கோவில், பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில், கிருஷ்ணன்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், கன்னியாகுமரி மற்றும் கொட்டாரம் பகுதிகளில் உள்ள முத்தாரம்மன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில் சுந்தரி அம்மன் உச்சினிமாகாளி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை போன்றவை நடைபெற்றன.

தாழக்குடியில் உள்ள ஔவையாரம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு படைத்து வழிபட்டார்கள். அம்மன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி3-வது செவ்வாயை யொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விசுவரூப தரிசனமும் நடைபெற்றது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் அதைத் தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனை நடந்தது. 7 மணிக்கு ஸ்ரீபலி பூஜையும் நிவேத்திய பூஜையும் நடந்தது.

அதன் பிறகு உஷபூஜையும் உஷ தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், களபம், சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11 மணிக்கு அம்மனுக்கு வைர கிரீடம் வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை மற்றும் நிவேத்திய பூஜை நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அம்மனுக்கு வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

1 More update

Next Story