ஒரே இடத்தில் 108 திவ்ய தேச கோவில்கள்

ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவிலைச் சுற்றி மற்ற திவ்ய தேசங்கள் சிறிய தனித்தனி ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு மலைகளுக்கு நடுவில் இயற்கை எழில் சூழ, சுயம்பு தேவியாக சொர்ண ரேகையுடன் வெளிப்பட்டவள், தேவி கருமாரி. இந்த தேவியை கருவாக வைத்து எழுப்பப்பட்டதே, தேவி கருமாரி அம்மன் ஆலயம். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
குறிப்பாக, 108 வைணவ திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையிலான பிரமாண்ட ஆலய வளாகம் இங்கு அமைந்துள்ளது. ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவிலைச் சுற்றி மற்ற திவ்ய தேசங்களும் சிறிய தனித்தனி ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது. 108 திவ்ய தேச கோவில்களிலும் பகவான் எந்த ரூபத்தில் எழுந்தருளியிருக்கிறாரோ அந்த ரூபங்களாகவே இங்கு தனித்தனியாக மூலவர்களை அமைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரே இடத்தில் உருவாக்கப்பட்ட 108 திவ்ய தேச கோவில் இதுவாகும். இக்கோவிலுக்கு அஸ்திவாரம் தோண்டும்போது திருமாலுக்குரிய திருமண் கட்டி பாறைகள் இருந்தது, இத்தலத்தின் புனிதத்தை உணர்த்துகின்றது. திருப்பதி செல்ல இயலாதவர்கள், இங்குள்ள வெங்கடாஜலபதியை வணங்கி மனநிறைவு அடையலாம்.
செங்கல்பட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் திருவடிசூலம் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்தில் வருவோர் திருவடிசூலம் என்ற இடத்தில் இறங்கி, 2 கிலோமீட்டர் உள்ளே வர வேண்டும். திருவடிசூலம் தேவாரத் தலத்தினை அடுத்து இக்கோவில் அமைந்துள்ளது.