"நிர்வாகம் பொறுப்பல்ல" - சினிமா விமர்சனம்
கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிர்வாகம் பொறுப்பல்ல'.
ஆசைவார்த்தைகள் கூறியும், கவர்ச்சியான விளம்பரங்கள் மூலமாகவும், காதல் என்ற பெயரிலும் பல மோசடிகளை அரங்கேற்றும் கார்த்தீஸ்வரன் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அந்த கோடிக்கணக்கான பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு சென்று செட்டில் ஆக நினைக்கும்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் சிக்குகிறார். போலீசிடம் சிக்கிய கார்த்தீஸ்வரன் தப்பித்தாரா? மக்களை மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் அவரது பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.
ஒருபக்கம் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற ரீதியில் அப்பாவி முகம். இன்னொரு புறம் 'அடேங்கப்பா...' என்று ஆச்சரியப்படும் மோசடி ஆசாமி முகம் என 2 வித நடிப்புகளால் கலக்கியிருக்கிறார், கார்த்தீஸ்வரன். விதவிதமான 'கெட்டப்'களில் மக்களை ஏமாற்றுவது ரசிக்க வைத்தாலும், சில 'கெட்டப்'கள் பொருந்தவில்லை என்றே சொல்லவேண்டும்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஸ்ரீநிதி கம்பீரமாகவும், கவர்ந்திழுக்கும் அழகோடும் வலம் வருகிறார். ஆதவன், லிவிங்ஸ்டன், பிளாக் பாண்டி, மிருதுலா சுரேஷ், அகல்யா வெங்கடேசன் என அனைவரும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள். என்.எஸ்.ராஜேஷ் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் இரைச்சல் வேண்டாமே...
மோசடி செய்து பணம் சம்பாதிக்கும் காட்சிகள் ரசிக்க வைத்தாலும், 'சதுரங்க வேட்டை' படத்தின் சாயல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. ஆன்லைன் மோசடி முதல் அனைத்து வித மோசடிகள் குறித்து காட்சிப்படுத்தி, மிகப்பெரிய எச்சரிக்கை விதையை தூவும் விழிப்புணர்வு படமாகவும் கொடுத்துள்ளார், இயக்குனர் கார்த்தீஸ்வரன்.
நிர்வாகம் பொறுப்பல்ல - எச்சரிக்கை மணி.








