பொங்கலுக்கு ரீலீசாகுமா “வா வாத்தியார்”?

‘வா வாத்தியார்’ படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான ‘வா வாத்தியார்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இயக்குனர் நலன் குமாரசாமி, "சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் .
திவாலானவர் என்று அறிவிக்கப்பட்ட மறைந்த தொழிலபதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடன் வாங்கியிருந்தார். தற்போது அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் திவாலானவர் என்ற நிலை இருப்பதால் அவரது சொத்துகளை சென்னை ஐகோர்ட்டின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார். ஞானவேல்ராஜா கடன் தொகை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று சொத்தாட்சியர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு தாக்கல் செய்திருந்தார். கடன் தொகையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே படத்தின் மீதான தடையை நீக்க முடியும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். ஆனால் ஞானவேல்ராஜா கடன் தொகையை செலுத்தாததால் கோர்ட் விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து தீர்ப்பளித்தது. கடனை திரும்ப செலுத்தும் வரை 'வா வாத்தியார்' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நாடியிருந்தது. ஆனால் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வழக்கு, சென்னை ஐகோர்ட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் தரப்பில், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கான டிடி-யை, பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் செலுத்தியது. ஆனால் மீதி தொகையையும் முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.






