‘குத்தாட்ட நடிகை’ என்ற முத்திரை குத்தி விடுவார்களோ...?- தமன்னா எடுத்த முடிவு

சமீபகாலமாகவே தமன்னா குத்துப் பாடல்களை திட்டவட்டமாக தவிர்த்து வருகிறாராம்.
‘மில்க்கி பியூட்டி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் மற்றும் ‘ஸ்திரீ2’ படத்தின் ‘ஆஜ் கீ ராத்’ குத்துப்பாடல்கள் மூலம் அவரது மார்க்கெட் உச்சத்தை எட்டியது.
சமீபகாலமாகவே அவர் குத்துப்பாடல்களை திட்டவட்டமாக தவிர்த்து வருகிறாராம். சமீபத்தில் வெளியான ‘துரந்தர்' படத்திலும் அவர்தான் குத்தாட்டம் போட இருந்தாராம். பின்னரே அவர் ஒதுங்கியுள்ளார். மேலும், ‘ஜெயிலர்-2' படத்திலும் குத்தாட்டம் போட படக்குழு அணுகியபோது, ‘கால்ஷீட்'டை காரணம் காட்டி தமன்னா மறுத்துவிட்டார்.
தொடர்ச்சியாக குத்துப்பாடல்களில் நடிப்பதால், தன்னை ‘குத்தாட்ட நடிகை’ என்ற முத்திரை குத்தி விடுவார்களோ... என்று அவர் பயப்படுகிறாராம். அதேவேளை ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டுவரும் தமன்னா, கவர்ச்சி ஆட்டம் போட்டால் அது விமர்சனமாகி விடும் என்றும் அஞ்சுகிறாராம். அதனாலேயே அவர் குத்தாட்டம் வேண்டாம் என்ற முடிவில் திட்டவட்டமாக இருப்பதாக பேசப்படுகிறது. மேலும் தனது திரைப்பயணத்தில் இமேஜ் மாற்றம், கதாபாத்திரத் தேர்வில் கவனம், எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றில் தெளிவாக செயல்பட விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், 36 வயதாகும் தமன்னாவை இந்த ஆண்டிற்குள் திருமண பந்தத்தில் இணைக்க குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டே அவர் குத்துப்பாடல்களை தவிர்க்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களிடையே இந்த மாற்றம் குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.






