‘மரகத நாணயம் 2’ படத்தின் புரோமோ வெளியானது

மரகத நாணயம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என்று இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்திருந்தார்.
சென்னை,
தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரகத நாணயம்'. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.
அதாவது இந்த படம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இரும்பொறை எனும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயத்தை கைப்பற்ற முயற்சிக்கும் வகையில் நகைச்சுவையாக உருவானது. கடைசியில் அதை கைப்பற்றினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதையாக இருந்தது.
இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகும் என்று இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி இந்த பாகத்தையும் தயாரிக்கிறது. இதில் ஆதி, நிக்கி கல்ராணி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகையில் 'மரகத நாணயம் 2' படத்திற்கான முக்கியமான அறிவிப்பு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. அதன்படி இன்று 'மரகத நாணயம் 2' படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.






