"பராசக்தி" படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்.. திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது

தணிக்கை வாரியம் பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
சென்னை,
2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்திருப்பதால் இப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. ஜனநாயகன் படத்தை போலவே, ‘பராசக்தி’ படத்துக்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது.
தணிக்கை வாரியம் ‘பராசக்தி’ படத்தில் குறிப்பிட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது.
இந்த நிலையில், கோர்ட்டு உத்தரவின் பேரில் தணிக்கை வாரியம் பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது . நாளை (ஜன.10) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று (ஜன.9) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
ஜனநாயகன் திரைப்பட வெளியீடு இன்னும் உறுதியாகாத நிலையில் பராசக்தி திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.






