நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தை “பராசக்தி” பிரதிபலிக்கும் - அதர்வா முரளி

10 ம் தேதி வெளியாக உள்ள ‘பராசக்தி’ படத்துக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
சென்னை,
2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்திருப்பதால் இப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை உருவாகியுள்ள ‘பராசக்தி’ படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பராசக்தி’ படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
‘பராசக்தி’ படம் பற்றி நடிகர் அதர்வா முரளி, “தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான் ‘பராசக்தி’கதையையும் அதில் என் கதாபாத்திரம் குறித்தும் முதலில் சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு நன்றி. ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன். வெள்ளித்திரையிலும் நிஜத்திலும் இப்போது சிவகார்த்திகேயன் என் சகோதரர்.
சினிமாவில் அவருடைய வளர்ச்சியை எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரின் வெற்றிகளைப் பார்த்து பல தருணங்களில் மகிழ்ந்திருக்கிறேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது. அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும்” என்றார்,






