“பத்ம பூஷண்” விருது - மக்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் மம்முட்டி

தனக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நடிகர் மம்முட்டி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை நேற்று வெளியிட்டது. நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளில், 13 பேருக்கு பத்ம பூஷண், 5 பேருக்கு பத்ம விபூஷண், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பலரும் மம்முட்டிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் மம்முட்டி பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பத்ம பூஷண் என்கிற உயரிய விருதால் கவுரவிக்கப்பட்டதற்காக தேசத்திற்கும், மக்களுக்கும், அரசிற்கும் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.






