‘பெண் இயக்குநர்களின் படங்கள் நிராகரிக்கப்படுகின்றன’ - ஆஸ்கார் கமிட்டி மீது ஹாலிவுட் நடிகை குற்றச்சாட்டு

கடந்த வருடம் பல்வேறு சிறந்த படங்களில் பெண் இயக்குநர்களால் உருவாக்கப்பட்டிருந்ததாக நடாலி போர்ட்மேன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக ‘ஆஸ்கார்’ விருது திகழ்கிறது. ஆஸ்கார் மேடைக்கு சென்று விருது பெறுவது என்பது உலகம் முழுவதும் உள்ள திரைக் கலைஞர்களுக்கு ஒரு கனவாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது விழா பிரம்மாண்டமாக நடைபெறும்.
அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான 98-வது ஆஸ்கார் விருது பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ரயான் கூக்லர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘சின்னர்ஸ்' திரைப்படம் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறாதது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்த நிலையில், பெண் இயக்குநர்களின் படங்கள் ஆஸ்கார் கமிட்டியால் நிராகரிக்கப்படுவதாக ஹாலிவுட் நடிகையும், இயக்குநருமான நடாலி போர்ட்மேன் குற்றம்சாட்டியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உலகப்புகழ் பெற்ற ‘ஸ்டார் வார்ஸ்’, ‘தோர்’, ‘பிளாக் ஸ்வான்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடாலி போர்ட்மேன், ‘நியூயார்க், ஐ லவ் யூ’, ‘ஈவ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் அமெரிக்காவின் சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் நடாலி போர்ட்மேன் நடித்த ‘தி கேலரிஸ்ட்’ படம் திரையிடப்பட்டது. இதனையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த வருடம் நான் பார்த்த சிறந்த படங்களில் பல்வேறு பெண் இயக்குநர்களால் உருவாக்கப்பட்டிருந்தன.
'சாரி பேபி', 'லெப்ட்-ஹேண்டட் கேர்ள்', 'ஹெட்டா' மற்றும் 'தி டெஸ்டமென்ட் ஆப் ஆன் லீ' உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால் விருது வழங்கும் கமிட்டியால் பல படங்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மட்டத்திலும் பல தடைகள் இருப்பதை நாம் காண்கிறோம். பெண் இயக்குநர்களுக்கு தகுந்த பாராட்டுகள் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.






