"நாய்களை மட்டுமல்ல.. ஆண்களையும் சிறையில் அடைக்கலாமா..?" - திவ்யா ஸ்பந்தனா

நாய்களுடன் ஆண்களை ஒப்பிட்டு திவ்யா ஸ்பந்தனா வெளியிட்ட பதிவு சர்ச்சையாகி உள்ளது.
தெருநாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்றது. அதில், "ஒரு நாய் எப்போது கடிக்கும் அல்லது கடிக்காது என்பதை யாராலும் கணிக்க முடியாது; நாயின் மனநிலையை எவராலும் படிக்க இயலாது; வருமுன் காப்பதே சிறந்தது. எனவே, பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களை 'நாய்கள் இல்லாத இடங்களாக' மாற்ற வேண்டும்" என உச்ச நீதிமன்ற அமர்வு வலியுறுத்தியது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகையும், எம்.பியுமான திவ்யா ஸ்பந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "ஆண்களின் மனதையும் யாராலும் படிக்க முடியாது. ஓர் ஆண் எப்போது பாலியல் வன்கொடுமை அல்லது கொலை செய்வான் என்பது யாருக்கும் தெரியாது. அதற்காக அனைத்து ஆண்களையும் முன்கூட்டியே சிறையில் அடைக்க முடியுமா" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
நாய்களுடன் ஆண்களை ஒப்பிட்டு அவர் வெளியிட்ட இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தையே தூண்டியுள்ளது. பலரும் இந்த ஒப்பீடே முதலில் தவறு எனக்கூறி வருகின்றனர். விலங்கு நல ஆர்வலரான இவர், தொடர்ந்து சமூக வலைதளங்களில் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் குறித்து தனது கருத்துகளை பதிவு செய்து வருகிறார்.






