"ஜன நாயகன்" திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு


ஜன நாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Jan 2026 10:44 AM IST (Updated: 9 Jan 2026 12:58 PM IST)
t-max-icont-min-icon

ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்சார் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளினால் சென்சார் சான்றிதழ் (தணிக்கை சான்று) வழங்கவில்லை. இந்த படத்தை மறுஆய்வு குழு பார்க்க உள்ளதாக தணிக்கை வாரியம் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், படத்தை தயாரித்துள்ள கே.வி.என்.நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு கடந்த 7 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, படத்துக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மனு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தணிக்கை வாரியம் சார்பில் சமர்பிக்கப்பட்டது. தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “ஜனநாயகன் படத்துக்கு எதிராக தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்தான் மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது” என்றார். அதற்கு நீதிபதி, “இந்த படத்தை முதலில் பார்த்த குழுவில் இடம்பெற்ற ஒரு உறுப்பினர், தன் கருத்தை பரிசீலிக்கவில்லை. சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்றுள்ளது என்று இதுபோல எப்படி புகார் கொடுக்க முடியும்? இந்த புகார் ஏற்புடையதுதானா? அனைத்தையும் பார்க்கும்போது வினோதமாக இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார். இந்த நடவடிக்கை அனைத்தும் சட்ட விதிகளை பின்பற்றியே நடந்துள்ளது என்றும் தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இதன்படி, இன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதி பி.டி ஆஷா தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: “ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் அதிகார வரம்பை சென்சார் தலைவர் மீறியுள்ளார். தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை ஜனநாயகன் படக்குழு மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. இதுபோன்ற புகார்களை ஊக்கப்படுத்த முடியாது. ஆவணங்களை ஆய்வு செய்த போது புகார்தாரரின் குற்றச்சாட்டு பிற்போக்குத்தனமானது என்பது தெரிகிறது. தணிக்கை குழுவில் உறுப்பினராக உள்ளவர் அளித்த புகாரை ஏற்க முடியாது. எனவே ஜனநாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்கிறேன். படத்திற்கு உடனடியாக யு/ஏ என குறிப்பிட்டு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story