“பராசக்தி” படத்துக்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் கும்பலை விளாசிய நடிகர்

‘பராசக்தி’ தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு மாணவர் இயக்கம் பற்றிய படம் என்று நடிகர் தேவ் ராம்நாத் தெரிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக ‘பராசக்தி’ திரைக்கு வந்துள்ளது. சென்சாரில் இந்தப் படத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படம் 2 நாட்களில் ரூ. 51 கோடி வசூல் செய்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
‘ஜன நாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ‘பராசக்தி’ படத்தின் கிரியேடிவ் புரொடியூசர் தேவ் ராம்நாத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் “நாங்கள் உங்கள் படத்துடன் எங்கள் படத்தையும் வெளியிடுகிறோம் என்பதற்காக, எங்கள் படத்தைச் சீர்குலைக்க உங்களுக்கு உரிமை இல்லை.நாங்கள்தான் எங்கள் ரிலீஸ் தேதியை முதலில் அறிவித்தோம். உங்கள் படத்தை நிறுத்த நாங்கள் முயற்சித்தோமா? ஒருபோதும் இல்லை. தடைகளைத் தாண்டுவதற்காக, சென்னை மற்றும் மும்பையில் உள்ள தணிக்கை துறை அலுவலகத்தில் நான் ஒவ்வொரு நாளும் இருந்தேன். உங்கள் குழு கையாண்டது போலவே நாங்களும் எங்கள் தணிக்கை பிரச்சினையை கையாண்டோம்.
பட வெளியீட்டிற்கு 18 மணி நேரத்திற்கும் குறைவாக இருந்தபோதே எங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது. எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்களை பயன்படுத்துவது, மக்களை தூண்டிவிடுவது, திரையரங்குகளில் அரசியல் கோஷங்களை எழுப்புவது . கடந்த ஆண்டும் ஒரு பெரிய படத்திற்கு நீங்கள் இதையே செய்தீர்கள். ஒரு சினிமா ரசிகனாக சொல்கிறேன், இது நம்மில் யாருக்கும் ஆரோக்கியமானதல்ல. ‘பராசக்தி’ என்பது நாம் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு மாணவர் இயக்கம் பற்றிய படம். எங்கள் மாணவர்கள் போராடியது போலவே நாங்களும் இதை எதிர்த்துப் போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார் தேவ் ராம்நாத்.
அவரது இந்த பதிவுடன் சில மோசமான விமர்சனங்களை பரப்பும் கும்பல் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.






