பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கி 2 பேர் காயம்

விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜுகு,
மராட்டியத்தின் ஜுகு நகரில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் பாதுகாப்பு வாகனம் ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது. இதுதொடர்பாக மும்பை போலீசார் கூறும்போது, 2 கார்கள் மற்றும் ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் 2 பேர் காயம் அடைந்தனர் என தெரிவித்தனர். நேற்றிரவு 8.30 மணியளவில், முன்னாள் சென்ற ஆட்டோ மீது பின்னால் வந்த கார் திடீரென மோதியது. இதில் கவிழ்ந்த அந்த ஆட்டோ, அக்சய் குமாரின் பாதுகாப்பு வாகனம் மீது மோதியது என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வீடியோக்களும் இணையதளத்தில் வெளிவந்துள்ளன. அதில், பலத்த காயமடைந்த 2 பேரை பொதுமக்கள் மீட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி ஆட்டோ ஓட்டுநரின் சகோதரர் முகமது சமீர் கூறும்போது, சகோதரருக்கு தேவையான மருந்துகள் கொடுத்து அவரை காப்பாற்ற வேண்டும். அவருடைய நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என கூறினார்.
ஆட்டோவும் பலத்த சேதமடைந்து உள்ளது. ஆட்டோவுக்கு இழப்பீடும் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று கூறினார்.






