வார ராசிபலன்: 28.12.2025 முதல் 03.01.2026 வரை

12 ராசிகளுக்கான விரிவான ஜோதிட கணிப்புகள்
வார ராசிபலன்
மேஷம்
இந்த வாரம் உங்கள் ஆளுமைத் திறன் பளிச்சிடும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீர்ந்து புதிய பாதை புலப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாள் கடன் சுமை குறையும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நிலவிய போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். முதலீடுகள் செய்ய இது சாதகமான வாரம். அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு மற்றும் தசை வலி ஏற்படலாம். அருகில் உள்ள கோவிலில் செவ்வரளி மாலை சாற்றி வழிபடவும். ரத்த தானம், மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு உதவுவது நன்மை தரும்.
ரிஷபம்
ராசியில் குரு வக்ரம் பெற்றிருப்பதால், எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். வார இறுதியில் மன நிம்மதி கூடும். தந்தை வழி உறவுகளால் அனுகூலமான செய்திகள் வரும். உறவினர்களிடையே வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நிம்மதி தரும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். நிதிநிலை திருப்திகரமாக இருப்பினும் பெரிய முதலீடுகளை வாரத் தொடக்கத்தில் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். கழுத்து வலி அல்லது தோள்பட்டை வலி ஏற்படலாம். வேலை செய்யும் போது நிமிர்ந்து அமர்வது நல்லது. மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றவும். கோவில் யானை அல்லது மீன்களுக்கு உணவு அளிப்பது தடைகளை நீக்கும்.
மிதுனம்
உங்கள் பேச்சுத்திறன் மற்றவர்களை கவரும். இக்கட்டான சூழலையும் நகைச்சுவையால் கையாளுவீர்கள். புத்தாண்டு புதிய நம்பிக்கையை தரும். சகோதரர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் பகிர வேண்டாம். சேமிப்பு உயரும் காலமிது. பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய சொத்து வாங்கும் யோகம் கூடி வரும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்பு மற்றும் தோல் தொடர்பான ஒவ்வாமை ஏற்படலாம். விஷ்ணு கோவிலில் துளசி தீர்த்தம் பெற்று அருந்தவும். திருநங்கைகளுக்குப் பச்சைப் பயறு அல்லது புதிய பச்சை ஆடை தானம் செய்வது சிறந்தது.
கடகம்
மனத்தெளிவு பிறக்கும். குழப்பங்களைத் தவிர்த்து யதார்த்தத்தைப் புரிந்துகொள்வீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தாயின் ஆசி கிடைக்கும். வீட்டில் விருந்தினர்கள் வருகையால் கலகலப்பு கூடும். வாழ்க்கைத் துணையுடன் சிறு சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். வருமானம் சீராக இருக்கும் என்றாலும் தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. வேலையில் நிலுவையில் இருந்த கோப்புகள் விரைந்து முடிவுக்கு வரும். சுயதொழில் செய்பவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கவும். முடிந்தவரை அம்பிகை, சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வது மிகுந்த மன அமைதி தரும்.
சிம்மம்
உங்கள் நிர்வாகத் திறமை கூடும் வாரம். இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதில் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த கவலைகள் மறையும். வாழ்க்கைத் துணையின் பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகலாம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட கால சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குவீர்கள். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினருக்கு அமோக லாபம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. இதயம் மற்றும் ரத்த ஓட்டம் தொடர்பான சிறு சங்கடங்கள் தோன்றலாம். மருத்துவப் பரிசோதனை அவசியம். சூரிய உதய தரிசனம், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது, காதில் கேட்பது நலம் தரும்.
கன்னி
புத்திசாலித்தனத்தால் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். உறவினர்களுடன் இணைந்து சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.குடும்பத்தில் திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். பங்குச்சந்தை மூலம் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். தேவையற்ற கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். தரகு மற்றும் கமிஷன் தொழிலில் இருப்பவர்களுக்குப் பெரிய வாய்ப்புகள் வரும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து லாபத்தை அதிகரிப்பீர்கள். கண் எரிச்சல், ஒற்றைத் தலைவலி வந்து நீங்கும். கண்ணுக்குப் போதுமான ஓய்வு அளிக்கவும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றுவது, பசுவுக்கு கீரை வகைகளை உணவாக அளிப்பது தடைகளைத் தகர்க்கும்.
துலாம்
ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். நீண்ட காலத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பழைய நண்பர்களால் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சகோதரிகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். நிதிநிலை மேலோங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கலை மற்றும் ஆபரணத் துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சிறுநீரகப் பாதையில் தொற்று ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும். யோகா, தியானம் செய்வது சிறந்தது. மகாலட்சுமிக்கு மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்வது சுப பலன்களைக் கூட்டும்.
விருச்சிகம்
எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து நிம்மதி கூடும். பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். வீட்டில் சுப காரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். புதிய நபர்களிடம் குடும்ப ரகசியங்களைப் பேச வேண்டாம். உடன்பிறந்தோரால் மகிழ்ச்சி உண்டு. காவல், ராணுவம் மற்றும் தீயணைப்புத் துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. ரியல் எஸ்டேட் துறையினருக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டு. கால் வலி, இடுப்பு வலி ஏற்படலாம். உழைப்பிற்கு ஏற்ற சரியான உறக்கம் அவசியம். தினமும் ராகு கால துர்க்கை வழிபாடு செய்யவும். அனுமனுக்குப் பானகம் படைத்து வணங்குவது கஷ்டங்களை நீக்கும்.
தனுசு
ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தந்தை வழி உறவினர் பிணக்குகள் தீரும். ஆன்மீகப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நிதிநிலை மிகச் சிறப்பாக இருக்கும். வங்கிச் சேமிப்பு உயரும். பூர்வீகச் சொத்து தொடர்பான சிக்கல்கள் முடிவுக்கு வரும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் இருமடங்காகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. புதிய தொழில் தொடங்க முதலீடுகள் கிடைக்கும். பித்தம் தொடர்பான உபாதைகள் வரலாம். உணவில் காரத்தைக் குறைத்து, எளிதில் செரிக்கும் உணவுகளை உட்கொள்ளவும். குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடவும். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யவும்.
மகரம்
குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். மூத்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சமூகத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு இருக்கும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த கடன் தொகை கைக்கு வரும். வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் கூடி வரும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். இரும்பு, சிமெண்ட் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி துறையினருக்குப் பெரும் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். வேலையில் இருந்த இறுக்கமான சூழல் மாறும். உடல் புத்துணர்ச்சி பெறும். வாயு சம்பந்தமான உபாதைகள் ஏற்படாமல் தவிர்க்க தண்ணீர் அதிகம் பருகவும். முதியவர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்குப் போர்வை தானம் செய்வது யோகம் தரும்.
கும்பம்
ராசியில் ராகு, வக்ர குரு பார்வை பெற்று அமர்ந்திருப்பதால் பொறுப்புகள் கூடும். கடின உழைப்பிற்குப் பின் நிச்சய வெற்றி கிடைக்கும். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களுடன் இருந்த கசப்புகள் நீங்கும். மூத்த சகோதரர் மூலம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வீட்டுத் தேவைகளுக்காகச் செலவுகள் செய்வீர்கள். சேமிப்புத் திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டுவீர்கள். இரும்பு, எண்ணெய், பழைய பொருள் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படும். புதிய திட்டங்களைச் செயல்படுத்த இதுவே சரியான நேரம். வாயுத்தொல்லை, மூட்டு வலி வரலாம். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அருகிலுள்ள கோயிலில் நல்லெண்ணெய் தீபம், ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்று நடுவது ஆகியவை நன்மை தரும்.
மீனம்
கற்பனைத் திறன் அதிகரிக்கும். புதிய கலைகளைக் கற்க ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக குருவின் ஆசி கிடைக்கும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். மனைவி ஆலோசனைகள் குடும்ப முன்னேற்றத்திற்கு உதவும். வீட்டில் திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். பழைய கடன்கள் அடைக்க வழி பிறக்கும். வருமானம் சீராக உயரும். புதிய சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். கல்வி நிறுவனம், வங்கித் துறையில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டு. உத்தியோகத்தில் புதிய நுணுக்கங்களைக் கற்பீர்கள். வியாபாரத்தில் விரிவாக்கப் பணிகளைத் தொடங்குவீர்கள். கால்களில் வீக்கம், பாத வலி ஏற்படலாம். பாதங்களைப் பராமரிப்பதில் கவனம் தேவை. அருகில் உள்ள கோயிலில் சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். மீன்களுக்குப் பொரி, அவல் அளிப்பது மிகவும் நல்லது.






