இந்த விரதம் இருப்பவர்கள் பால், பால் சார்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது


இந்த விரதம் இருப்பவர்கள் பால், பால் சார்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது
x
தினத்தந்தி 25 Sept 2025 4:18 PM IST (Updated: 25 Sept 2025 4:47 PM IST)
t-max-icont-min-icon

காமதேசு பசுவானது கேட்ட பொருட்களை வழங்கும் தெய்வீக சக்தி படைத்தது என்பதால் இந்து மதத்தில் பசு தெய்வமாக போற்றப்படுகிறது.

ஐப்பசி மாத தேய்பிறை துவாதசி திதியில் கடைப்பிடிக்கப்படும் விரதம் தான் 'கோவத்ஸ விரதம்'. இது பசுவை பூஜிக்கும் ஒரு விரத வழிபாடாகும். உலகத்தில் ஏராளமான ஜீவராசிகள் இருக்கும்போது, இந்துக்கள் பசுவை தெய்வமாக வழிபட என்ன காரணம் என்பது பலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் பாற்கடல் கடையப்பட்டபோது. அதில் இருந்து மகாலட்சுமியுடன் தோன்றியது காமதேனு பசு, கேட்ட பொருட்களை வழங்கும் தெய்வீக சக்தி படைத்தது காமதேனு பசு. இதனால் இந்து மதத்தில் பசு தெய்வமாக போற்றப்படுகிறது.

மேலும் அசுரர்களின் ஆதிக்கத்தால் பூமியின் பாரம் அதிகரித்த நேரத்தில், பூமாதேவி பசுவாக மாறி மகா விஷ்ணுவை நோக்கி சரணடைந்து முறையிட்டார். அதன் பயனாக பூமிபாரம் நீங்கியது. பூமாதேவியே பசுவின் உருவத்தில் மாறியதால், பசுவும் தெய்வமாகவே பார்க்கப்படுகிறது.

பசுவை பூஜிக்கும் கோமாதா பூஜை விசேஷமானது. பசுவின் தோற்றத்திற்கு மாறிய பூமாதேவியின் வழிபாடும் விசேஷமானது. பசுவை பால் சுரக்கச் செய்யும் தாய்மையும் விசேஷம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி (33 கோடி) தேவர்கள், பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள். நான்கு வேதங்கள், இந்திரன், வருணன் உள்ளிட்ட அஷ்டத்திக்கு பாலகர்கள், நவக்கிரகங்கள், அஷ்ட வசுக்கள், அஷ்ட லட்சுமிகள், சப்த ரிஷிகள் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே பசுவை பூஜிப்பது மிகவும் விசேஷம் என்று சொல்லப்படுகிறது.

கோவத்ஸ விரதம் மேற்கொள்ளும் அன்று காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் உள்ள பசுக்களை குளிப்பாட்டி, அவற்றிற்கு சந்தனம், குங்குமம் இட்டு அலங்காரம் செய்ய வேண்டும். அன்றைய தினம் நம் வீட்டில் உள்ள கன்றுகளை மன திருப்தியுடன் பசுவின் மடியில் பால் அருந்தச் செய்ய வேண்டும். பிற நாட்களில் கன்றானது அனைத்து பாலையும் குடித்து விடாதபடி, கொஞ்சம் அருந்தச் செய்து விட்டு, பிடித்து கொட்டிலில் கட்டி விடுவார்கள். அதுபோன்று கன்றை திருப்தியில்லாமல் விடக் கூடாது என்பதற்காக இந்த தினத்தில் மட்டும், கன்று விரும்பும் வரையில் பசுவிடம் பால் அருந்த விட வேண்டும் என்கிறார்கள்.

விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிடக் கூடாது. பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். பசுவின் பாலை விற்பனை செய்யவும் கூடாது. கோதுமை பொருட்கள், உளுந்து மற்றும் வெண்டைக்காய் போன்றவற்றை பசுக்களுக்கு உணவாக அளிக்க வேண்டும். பசுக்கள் மீதான கிருஷ்ணரின் அன்பையும், அவர் பசுக்களின் அருளாளர் என்பதையும் போற்றும் வகையில் பாடல்களை பாடலாம். அதோடு லட்சுமியின் அஷ்டோத்ரம் (108 நாமாவளி) சொல்லி வழிபடுவது சிறப்பு. இவ்வாறு செய்வதால் பிரம்ம சாபம், பிரேத சாபம், பெண் சாபம் போன்றவை நீங்கும். லட்சுமியின் கடாட்சம் வீட்டில் பெருகி, செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். பசுக்கள் இல்லாதவர்கள், ஆலயங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள கோசாலைக்கு சென்று அங்குள்ள பசுக்களுக்கு அலங்காரம், பூஜை செய்து வழிபடலாம்.

1 More update

Next Story