கூலி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தை சட்டவிரோதமாக வெளியிட 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூலி திரைப்படம் வரும் 14-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தை காலிசெய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் கட்டிடத்தில் செயல்படும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது, மேலும் கட்டிட வாடகையை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் ரூபாயாக உயர்த்தி, கூடுதல் தொகையாக ரூ.2.18 கோடியை 2025 டிசம்பர் 31-ம் தேதிக்குள் கட்டிட உரிமையாளர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் வழக்கமான அலுவல்கள் இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, தொடர்ந்து 14 வது நாளாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது.
மக்களின் வரிப்பணம் வீணாகிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்?
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இம்மாத இறுதி அல்லது செப்டம்பரில் இந்த வெளிநாட்டுப்பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பாபா காரக் சிங் மார்க் பகுதியில் 184 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. எம்பிகளுக்கான ஒவ்வொரு வீடும் தலா 5,000 சதுர அடி பரப்பளவு கொண்டதாக உள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் இரண்டாவது ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பொருளாதார வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு- மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பொருளாதார வளர்ச்சியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசே கூறியிருப்பதாக தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து தன்னை ஒருமையில் பேசுவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வியானது, மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கும் என்றும் முதல்-அமைச்சர் கூறினார்.
திருப்பூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ரூ.295 கோடி மதிப்பீட்டில் 19,785 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், ரூ.949 கோடியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். ரூ.182 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்-அமைச்சர், திருப்பூர் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.