உடுமலைப்பேட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திடலுக்கு மக்களை சந்தித்தபடியே சாலை மார்க்கமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். ரோடு ஷோவின் போது சாலையின் இருபுறமும் குவிந்து இருந்த மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவையில் ரேஷன் கடையை சூறையாடிய காட்டு யானைகள்
கோவை அறிவொளி நகர் அருகே ரேஷன் கடையை காட்டு யானைகள் சூறையாடின. ரேஷன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி மற்றும் பருப்பு மூட்டைகளை இழுத்து சேதப்படுத்தியுள்ளன. தகவலறிந்து வந்த மதுக்கரை வனத் துறையினர் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
தங்கம் விலை சரிவு
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சாண் ஏறி முழம் சறுக்கும் என்று பழமொழி ஒன்று சொல்வார்களே, அதற்கு எதிர்மாறாக தங்கம் விலை முழம் ஏறி, சாண் சறுக்கிறது என்றே சொல்லலாம். அதாவது, விலை ஏறும்போது அதிகமாக ஏறுகிறது. ஆனால், குறையும்போது சற்றே விலை குறைகிறது. இதுதான் தங்கம் விலையில் தொடர் கதையாக நடக்கிறது.
நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்து 560-க்கும், ஒரு கிராம் ரூ.9,445-க்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில், இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்திற்கும், ஒரு கிராம் ரூ.9,375-க்கும் விற்பனை ஆனது. அதே நேரத்தில், வெள்ளி விலை கடந்த 7-ந் தேதி முதல் ஒரு கிராம் ரூ.127 என்ற நிலையிலேயே தொடர்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ்
பீகாரில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சுட்டிக் காட்டி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் இதுகுறித்து விவாதிக்கக் கோரி திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.