திருச்செந்தூர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.;
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. மறுநாள் முதல் கோவிலில் மண்டல பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். மொத்தம் 35 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜைக்கான நிறைவு விழா இன்று நடந்தது.
இதையொட்டி கோவில் சண்முக விலாச மண்டபம், மகா மண்டபம் போன்ற அனைத்து பகுதிகளும் கரும்பு, பழங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 7 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரம் அருகே கரியமாணிக்க விநாயகர், மூலவர், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு கும்பங்கள் வைக்கப்பட்டு யாகபூஜைகள் நடந்தது.
அதேபோல் கந்தசஷ்டி யாகசாலை மண்டபத்தில் உள்ள சுவாமி சண்முகருக்கும், பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கும், குமாரவிடங்க பெருமான் சன்னதி பரிவாரமூர்த்தி தெய்வங்களுக்கும் கும்பங்கள் வைக்கப்பட்டு யாக பூஜைகள் நடைபெற்றது.
காலை 9.05 மணிக்கு பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடந்தது. பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் அந்தந்த சுவாமி சன்னதிகளுக்கு எடுத்து வரப்பட்டது. முதலில் வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு கும்ப நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலவர், சண்முகர், பெருமாள் உள்ளிட்ட பரிவார மூர்த்தி தெய்வங்களுக்கு கும்பநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர் சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.