தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு துணை நிற்போம் - த.வெ.க. தலைவர் விஜய்
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்ற வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் சாதனை.
தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது.
தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை நான் நேரில் சென்று சந்திக்கலாம் என்றிருந்த நேரத்தில்தான் அவர்களாகவே என்னைச் சந்திக்க விரும்புவதை அறிந்தேன். மேலும் நான் நேரில் சென்று அவர்களைச் சந்தித்தால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனக் கருதிய தூய்மைப் பணியாளர்கள், தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்திற்கே வந்து என்னைச் சந்தித்தனர்.
அப்போது தங்கள் நிலை குறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள், கல் நெஞ்சையும் கரைய வைப்பவை. கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், மனசாட்சியும், மக்களாட்சி மாண்பும் அறவே அற்ற ஒரு அரசாக இந்த வெற்று விளம்பர மாடல் அரசு இருந்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.
பலர் செய்யத் தயங்கக்கூடிய வேலைகளைத்தான் இவர்கள் சேவை மனப்பான்மையுடன் அரவணைத்துச் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்பில்தான் மாநகரம் சுத்தமாகிறது, நோய்த்தொற்றுகள் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு செயல்படும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு, கொடுத்த வாக்குறுதியின்படி செவி சாய்ப்பதே அரசின் கடமை.
எதிர்க்கட்சியாக இருந்தபோது தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்த வெற்று தி.மு.க., தற்போது வழக்கம் போல வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கி, நடுத்தெருவில் போராடும் நிலைக்குத் தள்ளிவிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பல்லாண்டுக் காலமாகச் சென்னை மாநகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் உள்ள எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கடந்த 19.01.2021 அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்-அமைச்சர் எழுதிய கடிதத்தின்படியும், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 153-ன் படியும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்து, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.