முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்த மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து மராட்டிய மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.;
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் ஒரு வார காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர், அங்கிருந்தபடியே அரசு அலுவல்களை கவனித்து வந்தார். உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். தொடர்ந்து 10 நாட்களுக்குப் பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்து தனது பணிகளை தொடங்கினார்.
இதையடுத்து அவரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் வைத்து மராட்டிய மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.
அப்போது முதல்-அமைச்சரின் சகோதரர் மு. க. முத்து மறைவின்போது வெளியூரில் இருந்த காரணத்தினால், அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்ததோடு, முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்தும் சி.பி. ராதாகிருஷ்ணன் விசாரித்தார்.