முதல்-அமைச்சர் கோப்பை: விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அழைப்பு
ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், வருகிற 16-ஆம் தேதிக்குள்ள இணையத்தில் முன் பதிவு செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.8.2025) பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சனின் தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் கலையரங்கத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை
நம்முடைய மாநிலங்களவை உறுப்பினர் அண்ணன் வில்சனுடைய பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, அதுமட்டும் அல்லாமல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதி ஆகியவற்றின் மூலம், இந்த பெரும்பாக்கம் அரசுக் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் கலையரங்கத்தை உங்களோடு சேர்ந்து திறந்து வைப்பதில் மிகுந்த பெருமையடைகின்றேன், மகிழ்ச்சி அடைகின்றேன்.
விளையாட்டுங்கிறது உங்க உடல் நலத்துக்கு மட்டுமல்ல, மனநலத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் மிக, மிக முக்கியம். இந்தக் கல்லூரியில நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.
அதே போல், தங்கைகள் தாரணி, ராஜலட்சுமி, தம்பி சக்திவேஷ் போன்றவர்கள் சிலம்பம் விளையாட்டுல இன்றைக்கும் பல சாதனைகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். இதெல்லாம் கல்லூரிக்கு மட்டுமல்ல, நம்முடைய மாநிலத்திற்கே மிகப் பெரிய பெருமை.
நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஒவ்வொரு வருடமும் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, இங்கே ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், (SDAT) இணையத்தளத்துல வர்ற 16-ஆம் தேதிக்குள்ள முன் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களோட கல்வித்திறமையையும், பன்முகத்திறமையையும் நீங்க தொடர்ந்து வளர்த்துகிட்டே இருங்கள்.
உங்க கல்லூரியோட வளர்ச்சிக்கும், மாணவர்கள் உங்களோட முன்னேற்றத்துக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு என்றைக்கும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.