சர்வதேச யோகா தினம்.. வெலிங்டன் ராணுவ மைய பகுதியில் பயிற்சி செய்த வீரர்கள்

வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி உலகம் முழுவதும் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய பகுதியில் கண்டோன்மென்ட் வாரியம் சார்பில், யோகா தின விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மைய கமாண்டன்டும் கன்டோன்மெண்ட் வாரிய தலைவருமான கிருஷ்ணேந்துதாஸ் கொடியசைத்து துவக்கி வைத்து யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் ஓட்டத்தில் ராணுவ அக்னி வீரர்கள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், கண்டோன்மென்ட் வாரிய ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான் ஓட்டம் கன்டோன்மென்ட் வாரிய மைதானத்தில் தொடங்கி தங்கராஜ் ஸ்டேடியத்தில் நிறைவு பெற்றது. அங்கு கன்டோன்மென்ட் வாரிய முதன்மை நிர்வாக அதிகாரி வினித் பாபாசாகிப்லோட்டே, மற்றும ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்களின் யோகா பயிற்சி நடைபெற்றது.