சர்வதேச யோகா தினத்தின் வரலாறு!

ஆந்திர மாநிலத்தில் வரும் 21-ந் தேதி கின்னஸ் உலக சாதனை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யோகா என்பது இந்தியாவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான பழமையான கலைகளில் ஒன்றாகும். இன்றைக்கு உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படும் யோகா, சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர். இந்துக்களின் 4 வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் யோகா என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது. யோகாவின் தந்தையாக பதஞ்சலி அறியப்படுகிறார். இந்திய முனிவரான இவர்தான் யோகா பயிற்சியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. யோகாவை எட்டு மூட்டு பாதையில் ஒழுங்குபடுத்தியவர் அவரே. யோகாவின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
1890-ம் ஆண்டு வரை யோகா கலை இந்தியாவில் மட்டுமே பிரபலமாக இருந்தது. சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு இந்தநிலை மாறியது. துறவியும், சிறந்த தத்துவஞானியுமான அவர் 1893-ம் ஆண்டு உலக மதங்களுக்கான நாடாளுமன்றத்தில் பேசும்போது, யோகாவை 'மனதின் அறிவியல்' என்று அறிமுகப்படுத்தினார். மேலும், யோகா சம்பந்தமான பல்வேறு நூல்களை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு அவர் மொழிபெயர்த்துள்ளார்.
விவேகானந்தரை தொடர்ந்து திருமலை கிருஷ்ணமாச்சார்யா உலக அளவில் யோகாவை பிரபலப்படுத்தினார். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் நரேந்திரமோடி பேசியபோது, தற்போதைய வாழ்க்கை முறைக்கு யோகாவின் முக்கிய தேவையை எடுத்துரைத்ததுடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவது குறித்தும் கருத்து தெரிவித்தார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற 117 உறுப்பு நாடுகளும் பிரதமர் மோடியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக கொண்டாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றைய நாள் கோடைக்கால சங்கராந்தி நாளாகும். ஆண்டின் மற்ற நாட்களைவிட சூரிய ஒளி அதிகம் பெறும்நாள் என்பதால், அன்றைய நாள் சர்வதேச யோகா தினத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 11-வது ஆண்டாக இந்த முறையும் கொண்டாடப்படுகிறது. வரும் 21-ந் தேதி ஆந்திர மாநிலத்தில் கின்னஸ் உலக சாதனை யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கி.மீ. தூரத்திற்கு யோகாசனம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில், அனக்காபள்ளி, அல்லூரி சீதாராம ராஜ், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 லட்சம் பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
இதுகுறித்து, மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தலைமை செயலாளர் கிருஷ்ணா பாபு கூறுகையில், "ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். அவர்களுக்கு மாநில அரசு சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்" என்றார்.
ஐ.நா. தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக, கூட்டு யோகா பயிற்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி ஐ.நா. தலைமையகத்தின் வடக்கு புல்வெளிப் பகுதியில் 20-ம் தேதி காலை 5 மணி முதல 6.30 மணி வரை நடைபெறும். இதற்காக முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஐ.நா. செயலகத்துடன் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதரகம் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.