காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்பு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?


காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடைய வாய்ப்பு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?
x
தினத்தந்தி 19 Oct 2025 9:17 AM IST (Updated: 19 Oct 2025 9:32 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் நிகழ்வு 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) உருவாகும் என சொல்லப்பட்டிருந்தது. அதாவது தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் ஆகியவற்றை நிகழ்வுகள் என்று குறிப்பிடப்படுகிறது. இது நல்ல மழையை கொடுக்கும்.

அந்த வகையில் 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப் பகுதி, முன்கூட்டியே 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகக் கூடும் என ஆய்வு மையத்தால் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டிருந்தது. அதன்பிறகு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லும் என கணிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதியில் கேரள-கர்நாடக கடற்கரையில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை

இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழ்நாட்டில் நிச்சயம் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பொதுவாக வங்கக்கடலில் உருவாகும் நிகழ்வுகள் மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் அது மழையை கொடுக்கக்கூடியதாகவே இருக்கும். கடலோர மாவட்டங்களில் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகிறது. இது வடகிழக்கு பருவமழையை மேலும் தீவிரப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் நாளை மறுதினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், கடலூரில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 More update

Next Story