அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்த அனிசிமோவா

கோப்புப்படம்
அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா, முன்னாள் சாம்பியனான இகா ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
நியூயார்க்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி) 6-1, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் சக நாட்டவரும், 10-ம் நிலை வீரருமான லோரென்சோ முசெட்டியை சாய்த்து தொடர்ந்து 5-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் 4-6, 7-6 (9-7), 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 8-ம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றிக்காக அவர் 4 மணி 10 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. அரைஇறுதியில் அலியாசிம், ஜானிக் சினெருடன் மல்லுக்கட்டுகிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதியில் தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் அமெரிக்க வீராங்கனை அமன்டா அனிசிமோவா 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், 2-ம் நிலை வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக்குக்கு (போலந்து) அதிர்ச்சி அளித்து அமெரிக்க ஓபனில் முதல்முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். அத்துடன் கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அவரிடம் கண்ட மோசமான தோல்விக்கும் (0-6, 0-6) பழிதீர்த்துக் கொண்டார்.
வெற்றிக்கு பிறகு 24 வயதான அனிசிமோவா கூறுகையில், ‘ஸ்வியாடெக்குடன் விம்பிள்டன் இறுதி சுற்றில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் என்ன தவறு செய்தேன் என்பதை அறிந்து கொள்ள அந்த வீடியோ காட்சியை முந்தைய நாள் பார்த்தேன். பார்க்கும் போதே வேதனையாக இருந்தது. அந்த தோல்வியில் இருந்து இவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்து வெற்றி பெற்றது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இது, எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும்’ என்றார்.
இன்னொரு கால்இறுதியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் கரோலினா முச்சோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி 3-வது முறையாக அரைஇறுதியை எட்டினார். நவோமி ஒசாகா அடுத்து அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
ஆண்கள் இரட்டையர் கால்இறுதியில் யுகி பாம்ப்ரி (இந்தியா)- மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடி 6-3, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் நிகோலா மெக்டிச் (குரோஷியா) -ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணையை விரட்டியடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. டெல்லியை சேர்ந்த 33 வயதான யுகி பாம்ப்ரி கிராண்ட்ஸ்லாமில் அரைஇறுதிக்கு வருவது இதுவே முதல்முறையாகும். அடுத்து யுகி பாம்ப்ரி கூட்டணி, இங்கிலாந்தின் ஜோ சாலிஸ்பரி- நீல் ஸ்குப்ஸ்கி இணையை சந்திக்கிறது.