சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
சென்னை,
இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சம்மேளம் சார்பில், தமிழக அரசு ஆதரவுடன் 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் மற்றும் நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெறும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் எகிப்து, இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, தென்கொரியா, ஹாங்காங், சீனா, தென்ஆப்பிரிக்கா, போலந்து, சுவிட்சர்லாந்து, பிரேசில் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் அனாஹத் சிங், ஜோஸ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த அனாஹத் சிங் தவிர மற்ற மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த போட்டிக்கான இலச்சினை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கலந்து கொண்டு இலச்சினையை அறிமுகம் செய்து வைத்தார்.






