தேசிய மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ் போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்

பெண்கள் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் என 9 வகையான வயது பிரிவினருக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது.
சென்னை,
மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) சார்பில் அல்டிஸ் நிறுவனம் ஆதரவுடன் தேசிய மாஸ்டர்ஸ் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சி.சி. மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் பிரிவில் 35, 40, 45, 50, 55, 60, 65, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், பெண்கள் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் என 9 வகையான வயது பிரிவினருக்கு தனித்தனியாக போட்டி நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு, மராட்டியம், டெல்லி, மேற்கு வங்காளம் உள்பட 19 மாநிலங்களை சேர்ந்த 185 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.4 லட்சமாகும். ஒவ்வொரு வயது பிரிவிலும் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.20 ஆயிரமும், 2-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும். இந்த தகவலை எம்.சி.சி. தலைவர் விவேக் ரெட்டி சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.