எனது சாதனை பயணம் தொடரும்: செஸ் சாம்பியன் திவ்யா நம்பிக்கை

கோப்புப்படம்
மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ் முக் பட்டம் வென்றார்.
ஜார்ஜியா,
ஜார்ஜியாவில் நடைபெற்ற உலக கோப்பை செஸ் போட்டியில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ் முக் பட்டம் வென்றார். அவர் இறுதிப்போட்டியில் சக நாட்டைச் சேர்ந்த கோனேரு ஹம்பியை தோற்கடித்தார். இதன் மூலம் உலக கோப்பை செஸ் போட்டி யில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை அவர் பெற்றார். இருவரும் மோதிய கூடுதல் 2 ஆட்டமும் 'டிரா' ஆனது.
நேற்று நடந்த டை பிரேக்கரில் 75-வது காய் நகர்த்தலுக்கு பிறகு திவ்யா தேஷ்முக் வென்று சாம்பியன் ஆனார். 19 வயதான அவர் மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர். அவருக்கு ரூ.43.24 லட்சம் பரிசு தொகை கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த ஆந்திராவை சேர்ந்த ஹம்பிக்கு ரூ.30.26 லட்சம் வழங்கப்பட்டது.உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் திவ்யா கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்றார்.
இதன் மூலம் ஹம்பி, ஹரிதா, வைஷாலி ஆகிய வீராங்கனைகள் வரிசையில் அவர் இணைந்தார். இந்தியாவின் 88-வது கிராண்ட் மாஸ்டர் திவ்யா ஆவார். இந்தப் போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த திவ்யாவும், ஹம்பியும் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர். உலக கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து திவ்யா தேஷ்முக் நிருபர்களிடம் கூறியதாவது,
வெற்றி பெறுவதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. இந்த போட்டிக்காக என்னை நன்றாக தயார் படுத்தி கொண்டேன். இது முக்கிய பங்கு வகித்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு நான் பட்டம் வெல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. பலம் வாய்ந்த வீராங்கனைகளுடன் மோதினேன்.உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஹம்பியை வீழ்த்தி பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவர் சிறந்த வீராங்கனை. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவருக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது.இந்த வழக்குமுறையில் தான் நான் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற வேண்டும் என்ற விதி இருந்துள்ளது.
இதற்கு முன்னர் ஒரு ஜி.எம். நார்ம்ஸ் கூட என்னி டம் இல்லை. இப்போது நான் கிராண்ட் மாஸ்டர். நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். எனது சாதனை பயணம் தொடரும். இது வெறும் தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.