சென்னையில் சர்வதேச டிரையத்லான் பந்தயம்

போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
சென்னை,
அயர்மேன் அமைப்பு சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) ஆதரவுடன் சர்வதேச டிரையத்லான் பந்தயம் சென்னையில் அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 11-ந் தேதி நடக்கிறது. 1½ கிலோ மீட்டர் தூரம் நீச்சல், 40 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுதல், 10 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் ஆகியவற்றை உள்ளிடக்கிய இந்த சர்வதேச டிரையத்லான் பந்தயம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்.ஜி.எம். கடற்கரை சொகுசு விடுதியில் இருந்து தொடங்கி நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். வீரர்கள் பதிவு குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இது தவிர டுயாத்லான் போட்டி இரு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் நீச்சலை மட்டும் தவிர்த்து விட்டு சைக்கிளிங், மற்றும் ஓட்டம் இடம் பெறும்.
சர்வதேச டிரையத்லான் பந்தயம் குறித்த அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போட்டிக்கான லோகோவை வெளியிட்டார். அத்துடன் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்த தமிழக முதல்-அமைச்சர் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதாக அறிவித்தார். மேலும் போட்டியை நடத்துவது தொடர்பாக எஸ்.டி.ஏ.டி., அயர்மேன் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, அயன்மேன் அமைப்பின் பிரதிநிதிகள் தீபக்ராஜ், ஆர்த்தி சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.