உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்ற இளவேனில் வாலறிவன்

அஞ்சும் மோடுகில் (2018) மற்றும் மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் இதற்கு முன்பு பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருந்தனர்.
கெய்ரோ,
எகிப்து நாட்டில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இளவேனில் வாலறிவன் (வயது 26) இன்று நடந்த 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டார். போட்டியின் இறுதி வரை முன்னணி வகித்த அவர், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19-வது சுடுதலுக்கு பின்னர் சரிவை சந்தித்து, 3-வது இடத்திற்கு சென்றார். இதனால், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
எனினும் அவர், 232 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து, வெண்கல பதக்கம் வென்றார். தென் கொரியாவின் பான் ஹியோஜின் (255 புள்ளிகள்) முதல் இடமும், சீனாவின் வாங் ஜைபெய் (254 புள்ளிகள்) 2-வது இடமும் பிடித்தனர்.
இந்த பிரிவில் பதக்கம் வென்ற இளவேனில், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3-வது இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்பு அஞ்சும் மோடுகில் (2018) மற்றும் மெஹுலி கோஷ் (2023) ஆகியோர் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்திருந்தனர்.






